சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கோஷ்டியே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேசமயம், புத்தெழுச்சியுடன் செயல்பட்ட கார்த்தி சிதம்பரம் கோஷ்டியினர் 2வது இடத்தைப் பிடித்து நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும். அதற்கு முதல் படியாக இளைஞர் காங்கிரஸை செம்மைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தேர்தலை அறிவித்தார் ராகுல் காந்தி.
இதற்காக தமிழகத்திற்கு இரண்டு முறை வந்தும் போனார். அவரது வருகையாலும், செயல்பாட்டாலும் கவரப்பட்ட ஏராளமான இளைஞர்கள் இளைஞர் காங்கிரஸில் இணைந்தனர். அதே வேகத்தோடு தேர்தலும் நடந்தது.
ஆனால் ராகுல் காந்தி என்ன எண்ணத்தில் இதை செயல்படுத்த முனைந்தாரோ அதற்கு முற்றிலும் நேர் மாறாக காங்கிரஸின் பல்வேற கோஷ்டிகளின் தலைவர்களும் பதவியைப் பிடிக்க சரமாரியான முயற்சிகளில் குதித்தனர்.
குறிப்பாக வாசன், கார்த்தி சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு என இருக்கிற அத்தனை கோஷ்டிகளின் தலைவர்களும் தத்தமது ஆட்களை உள்ளே நுழைத்த விட பிரம்மப் பிரயத்தனம் செய்தனர்.
இதில் வாசன், கார்த்தி கோஷ்டிகளுக்கு இடையில்தான் கடும் மோதல் நிலவியது.
ஓட்டுப் போட பணம் கொடுத்த கொடுமைகளும் கூட நடந்தன. பல ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழித்து ஓட்டுக்களை வாங்கி புதிய புரட்சி படைத்து விட்டனர் கோஷ்டித் தலைவர்கள்.
இந்த நிலையில், தலைவர் தேர்தலில் வாசன் கோஷ்டியைச் சேர்ந்த யுவராஜா வெற்றி பெற்றார். 2வது இடத்தைப் பிடித்தார் கார்த்தி சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த வரதராஜன். இவர் தற்போது துணைத் தலைவராகியுள்ளார்.
இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 எம்.பி. தொகுதிகளுக்கான தலைவர் பதவிகளில் பெரும்பாலானவற்றை வாசன் கோஷ்டியே கைப்பற்றியுள்ளதாம். மொத்தம் 23 இடங்களை வாசன் கோஷ்டி கைப்பற்றியுள்ளது.
கார்த்தி சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் 12 இடங்களில் வென்றுள்ளனர். ஜெயந்தி நடராஜன் கோஷ்டிக்கு ஒரு இடம் கிடைத்துள்ளதாம்.
மற்ற இடங்களில் மற்ற கோஷ்டியினர் வென்றுள்ளனர்.
இந்தத் தேர்தலின் மூலம், காங்கிரஸைப் போலவே, இளைஞர் காங்கிரஸிலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி விட்டது வாசன் கோஷ்டி. இதன் மூலம் தமிழக காங்கிரஸிலேயே மிகவம் வலிமையான பெரிய கோஷ்டி தாங்கள்தான் என்ற பூரிப்பில் உள்ளனராம் வாசன் கோஷ்டியினர்
Leave a Reply