ஈரோடு: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
மூலம், 2010 ஜன., 1 முதல் நேற்று வரை, 31 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 455 ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் ஈரோடு மாவட்டம், மஞ்சள் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாகத் திகழ்கிறது. ஈரோட்டில் ஒழுங்கு முறை விற்பனை மையம் கண்காணிப்பில், 205 தனியார் கமிஷன் மண்டிகளும், 135 தனியார் ஏற்றுமதி நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது போக நகரில் ஈரோடு கூட்டுறவு சொசைட்டி, கோபி கூட்டுறவு சொசைட்டி ஆகியவை உள்ளன. மஞ்சள் மார்க்கெட்டுக்கு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து 60 சதவீத மஞ்சளும், கர்நாடகா, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, வேலூர் போன்ற பகுதியில் இருந்து 40 சதவீத மஞ்சளும் வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மைசூரு சம்பா, 8ம் நம்பர், 10ம் நம்பர் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுவது வழக்கம். எட்டாம் நம்பர் மஞ்சள், டிசம்பர் மாதத்தில் அறுவடை பணி துவங்கி, ஜனவரி மாதத்தில் மார்க்கெட்டுக்கு வரும். கர்நாடகா, சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருவண்ணாமலை, வேலூர் பகுதியிலிருந்து, வழக்கமாக பிப்ரவரி 15ம் தேதிக்கு மேல், புதிய மஞ்சள் வரும். அதற்கு பின், புதிய மஞ்சள் வரத்து அதிகரிக்கும். மைசூரு சம்பா, 10ம் நம்பர் ஆகிய ரகங்கள் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அறுவடைக்கு வரும். வரலாறு காணாத வகையில், நான்கு மாதமாக மஞ்சள் விலை குவிண்டால் 13 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், மஞ்சள் சாகுபடி பரப்பளவு அதிகரித்தது. நடப்பாண்டில் போதிய மழை பெய்யாததாலும், மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்ததாலும், விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் மஞ்சள் சாகுபடி செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் விளையும் மஞ்சள், பஞ்சாப், டில்லி, காஷ்மீர், கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு, அதிகளவில் ஏற்றுமதியாகிறது. ‘கோரா’ எனப்படும் பாலீஷ் மஞ்சளும், சாயமிடப்பட்ட சாயச்சரக்கு மஞ்சளும் அதிகளவில் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகின்றன. சென்றாண்டில் மஞ்சள் விலை உயர்வு காரணமாக, 2010 துவக்கத்தில் இருந்தே, ஈரோடு மஞ்சள் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு, வரத்து சீராக இருந்தது. சென்ற ஜனவரி முதல் நேற்று வரை, 55 ஆயிரத்து 849 மூட்டைகள், 31 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 455 ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து நேற்று வரை 14 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரத்து 663 ரூபாய்க்கு விற்று சாதனை படைத்துள்ளது.
Leave a Reply