புதுடில்லி: ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்களை எச்சரிக்கும் விதத்தில், ‘அப்படிப்பட்டவர்கள் மீது கருணையோ, இரக்கமோ காட்ட முடியாது’ என்று, டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. டில்லியில் ஒரு பஸ் நடத்துனர், பயணிகளிடம் டிக்கெட் கொடுக்காமல் காசு மட்டும் வாங்கிக் கொள்வார்.
கடந்த 2000ம் ஆண்டில், அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது இது வெளிவந்தது. அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். பின், 2005ல் அவர் காலமானார். அவரது பணி நீக்கத்தை எதிர்த்து அவரது மனைவி சார்பில், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கைலாஷ் கம்பீர் கூறியதாவது: லஞ்ச ஊழலில் சிக்கிய அரசு பஸ் ஊழியர் மீது கருணையோ, இரக்கமோ காட்ட முடியாது. அவர் மிகச் சிறிய அளவில் ஊழல் செய்திருந்தாலும் இது பொருந்தும். ஊழல் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்று. ஒரு சராசரி மனிதன், பஸ் நடத்துனர், டிக்கெட் கொடுக்காமல் காசு மட்டும் வாங்கி அதன் மூலம் ஊழல் செய்யமுடியும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். இவ்வழக்கில் நடத்துனரின் அதிகாரப்பூர்வமான மாத வருமானத்தை விட அதிகளவில் சம்பாதித்துள்ளார். நடத்துனரின் இதற்கு முந்தைய காலகட்டத்தில் அவர் நேர்மையாக இருந்தது கூட இவ்வழக்கில் உதவாது. அவர் செய்த ஊழலுக்கு அவரைப் பணியிலிருந்து நீக்கியது உரிய தண்டனைதான். இவ்வாறு நீதிபதி கம்பீர் தெரிவித்தார்.
Leave a Reply