முக அழகிரி பேரவை என்ற பெயரில் எந்த அமைப்பையும் நான் அங்கீகரிக்கவில்லை. அப்படி ஏதாவது அமைப்பு செயல்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய அமைச்சர் முக அழகிரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய உரங்கள் மற்றும் ரசாயனத் துறைஅமைச்சரும் திமுக வின் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி விடுத்துள்ள அறிக்கை:
“திமுக சட்ட விதிகளுக்கு மாறாக எனது பெயரில் மு.க.அழகிரி பேரவை என்ற அமைப்பை தொடங்கி சில தவறான செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழகத்தின் சில இடங்களில் இப்படிப்பட்ட அமைப்புகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
எனது பெயரில் தனியாக பேரவை என்ற அமைப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அந்த பெயரில் செயல்படுபவர்கள் குறித்து எந்த விதமான அடையாளமும் எனக்கு தெரியாது.
ஏற்கனவே இது போல் பலமுறை அறிவிப்புகள் வெளியிட்ட பொழுதும் கூட சிலர் தங்களது சுய லாபத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் என் பெயரை பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே மு.க.அழகிரி பேரவை என்று அறிவித்து செயல்படுபவர்கள் மீது தலைமை கழகம் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் முக அழகிரி.
Leave a Reply