சென்னை:’ஐகோர்ட்டை கலவர பூமியாக ஆக்குகின்றவர்கள் யாராக இருந்தாலும், பொதுமக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்’ என, முதல்வர் கருணாநிதி பேசினார்.
சட்டசபையில், சென்னை ஐகோர்ட்டில் நடந்த சம்பவம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முதல்வர் அளித்த விளக்கம்:நாட்டில் முதன் முறையாக ஒரு கலைக்கல்லூரிக்கும், அதன்பிறகு துவங்கப்பட்ட சட்டக் கல்லூரிக்கும் அம்பேத்கர் பெயரை நான் வைத்துள்ளேன். அதன் பிறகு, அம்பேத்கர் பெயரில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் கிடைக்காத போது, சென்னை கிரீன்வேஸ் சாலையில், எனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை, அந்த பல்கலை அலுவலகம் ஆக்குங்கள் என்று சொன்னேன்.
மரத்வாடா பல்கலைக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டவும் காரணமாக இருந்தேன். இவைகளுக்கு எல்லாம் காரணமாக இருந்தது தவறு என்று, என்மீது குற்றம்சாட்டி, ஐகோர்ட்டிற்குள் நுழைய விடக்கூடாது என்று சொல்லியிருந்தால் அது நியாயம்.அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில், 1,000 பேர் பந்தலில் கூடியிருந்தனர். அவர்களில் நான்கைந்து பேர் எழுந்து, கலகம் விளைவித்தனர். அந்த கலவரத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர் என்ற செய்திக்கு நான் வருத்தத்தை தெரிவிக்கிறேன். அதற்கு உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுப்பேன்.
கறுப்புக் கொடிக்கு தி.மு.க., அஞ்சக்கூடிய இயக்கமல்ல. பிரதமர் நேருவுக்கே என் தலைமையில் கறுப்புக் கொடி காட்டியிருக்கிறோம்.இன்று நேற்றல்ல, 14 வயது முதல் பேசிக் கொண்டிருக்கிறேன். என் கடைசி மூச்சு இருக்கின்ற வரையில் பேசிக்கொண்டு இருப்பேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு, ‘நன்றாக சமாளித்தீர்கள்’ என, நீதிபதிகள் பாராட்டிச் சென்றனர். அவர்கள் கறுப்புக் கொடி பிடித்துக் கொண்டே இருக்கட்டும். ஆனால், ஒரு காலத்தில் 500 பேர் கறுப்புக் கொடி காட்டினார்கள் என்பது மாறி, ஐந்து, ஆறு பேர் என்ற அளவிற்கு சுருங்கியுள்ளனர். வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் பால் கனகராஜ், இதை ஏற்கவில்லை. வக்கீல்கள் சங்க தலைவர் மட்டுமல்லாது, ஐகோர்ட் நீதிபதியே அவர்களை அழைத்து, ‘எந்தத் தகராறும் வேண்டாம்’ என பேசியுள்ளார்.அவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டுதான் போயிருக்கிறார்கள்.
கோர்ட் தீர்ப்பு வந்த பிறகும், நான்கு போலீஸ்காரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என, கறுப்புக்கொடி காட்ட காரணம் சொல்கிறார்கள். நடவடிக்கை எடுத்தால், அவர்கள் அதை சட்டரீதியாக அணுகும்போது, எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? இதையும் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.ஐகோர்ட்டை கலவர பூமியாக ஆக்குகின்றவர்கள் யாராக இருந்தாலும், பொதுமக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். அந்த நிகழ்ச்சியை நானும் மறந்து விடுகிறேன்; நீங்களும் மறந்துவிடுங்கள்; வக்கீல்களும் மறந்துவிட்டு நல்ல வழியை மக்களுக்குக் காட்டுங்கள்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
Leave a Reply