ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் பெற்ற 2 நிறுவனங்களில ஐடி ரெய்டு

மும்பை: ஐபிஎல் போட்டிகளை டிவிகளில் ஒளிபரப்பு செய்யும் உரிமம் பெற்றுள்ள இரண்டு நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

மல்டி ஸ்கிரீன் மீடியா மற்றும் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் ஆகிய இரு நிறுவனங்களும்தான் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை உலகம் எங்கும் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமத்தைப் பெற்றுள்ளன. இதற்காக ரூ. 8200 கோடி அளவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றில் மோடியே நேரடியாக பங்கேற்றிருந்தார். பேச்சுவார்த்தைக் கட்டணமாக மல்டி ஸ்கிரீன் மீடியாவிடமிருந்து 80 மில்லியன் டால்ர் பணத்தை வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் பெற்றதாக கூறப்பட்டது. இதை வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மறுக்கவில்லை. அதில் தவறும் இல்லை என்று அது கூறியிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை இந்த இரு நிறுவனங்களுக்கும் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஒளிபரப்பு உரிம்ம் தொடர்பான விவரங்கள், ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மோடிக்குச் சொந்தமான மோடி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் தொடர்புடையதாகும். இதன் காரணமாக மோடியின் விருப்பபடி வேர்ல்ட் ஸ்போர்ட்ஸுக்கும், மல்டி ஸ்கிரீன மீடியாவுக்கும் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்டதாக சர்ச்சை நிலவி வருகிறது.

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வரும் சோனி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சொந்தமானது தான் மல்டி ஸ்கீரின் மீடியா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *