ஐ.பி.எல்., போட்டியில் சூதாட்டம் அம்பலம் : 27 வீரர்களுக்கு தொடர்பு

tblfpnnews_3037661315மும்பை : தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது ஐ.பி.எல்.,தொடரின் போது பெருமளவு கிரிக்கெட் சூதாட்டம் நடந்துள்ளது. இதில் 27 வீரர்களுக்கு தொடர் இருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.

கடந்த 2000ல் தென் ஆப்ரிக்க அணி, இந்தியா வந்த போது சூதாட்ட பிரச்னை முதல்முறையாக விஸ்வரூபமெடுத்தது. சூதாட்ட புக்கிகளிடம் கோடிகளை பெற்றுக் கொண்டு, போட்டிகளை வேண்டுமென்றே வீரர்கள் விட்டுக் கொடுத்த விபரம் அம்பலமானது. இதில் தொடர்புடைய தென் ஆப்ரிக்காவின் குரோனியே, இந்தியாவின் அசார், ஜடேஜா போன்றவர்களுக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்திய கிரிக்கெட்டில் சூதாட்ட பிரச்னை கிளம்பியுள்ளது. இம்முறை ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி சிக்கியுள்ளார். கடந்த 2009ல் லோக்சபா தேர்தல் காரணமாக பாதுகாப்பு பிரச்னை ஏற்பட, மத்திய அரசுக்கு சவால் விடுத்த மோடி, இரண்டாவது ஐ.பி.எல்., ‘டுவென்டி-20’ தொடரை தென் ஆப்ரிக்காவில் நடத்தினார். இத்தொடர், இந்தியாவுக்கு வெளியே நடந்ததால், கிரிக்கெட் சூதாட்டம் படுஜோராக அரங்கேறியுள்ளது. இது தற்போது வருமான வரித்துறை நடத்திய சோதனையின் போது தெரிய வந்துள்ளது. 27 வீரர்கள் மற்றும் ஒரு நிர்வாகி சூதாட் டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சூதாட்டத்தின் பின்னணியில் லலித் மோடி இருந்துள்ளார். இவருக்கு சாதகமாக 3 அணிகள் இருந்துள்ளன. இவர் சார்பில் டில்லியை சேர்ந்த தொழில் அதிபர் சமிர் தக்ரால், பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். இவரது மொபைல் போன் உரையாடல்களை ஆய்வு செய்த போது, புக்கிகளிடம் பேசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூதாட்டம் பற்றிய தங்களது அறிக்கையை வருமான வரித்துறையினர் மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளனர். ஏற்கனவே, பெரும் சர்ச்சையில் சிக்கி தவிக்கும் மோடிக்கு, சூதாட்ட புகார் இன்னொரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சூதாட்ட புகார் விபரத்தை கேட்டு ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். கோல்கட்டா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஜெய் கூறுகையில்,”சூதாட்ட புகார் உண்மையானால் மோடியிடம் விளக்கம் கேட்போம்,”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *