ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் தூசியால் 6 மாதத்திற்கு விமான போக்குவரத்து பாதிக்கும்?

posted in: உலகம் | 0

பிரேசிலியா: ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை தொடர்ந்து குமுறி வந்தால் அடுத்த ஆறு மாத்த்திற்கு விமான போக்குவரத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

2வது முறையாக ஐஸ்லாந்து எரிமலை குமுறி வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் எழுந்துள்ள சாம்பல் தூசி ஐரோப்பிய வான்வெளியை அப்படியே மறைத்து நிற்கிறது. இதனால் விமானப் போக்குவரத்து [^] முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து விமான்ங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிலைமை மேம்பாடு அடையாததால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலின்போதுதான் ஆயிரக்கணக்கான விமானங்களை ஐரோப்பிய நாடுகள் ரத்து செய்தன. அதன் பின்னர் இப்போதுதான் அதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு விட்டன. அங்கு வரும் விமானங்களை ஹங்கேரிக்கும், ருமேனியாவில் உள்ள சில விமான நிலையங்களுக்கும் திருப்பி விட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் காயமடையும் வீரர்களை அழைத்து வரும் அமெரிக்க ராணுவ விமானங்களும் இந்த சாம்பல் மண்டலத்தால், பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. வேறு மார்க்கம் வழியாக அவை ஆப்கானிஸ்தானிலிருந்து விமானங்களை இயக்கி வருகின்றன.

எரிமலை தொடர்ந்து குமுறி வந்தால், அடுத்த ஆறு மாதங்களுக்கு விமானப் போக்குவரத்தையே நடத்த முடியாத நிலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் ஐரோப்பிய, அமெரிக்க விமான நிறுவனங்கள் பீதியடைந்துள்ளன.

சமீபத்தில்தான் பொருளாதார சீர்குலைவு பிரச்சினயிலிருந்து விமான நிறுவனங்கள் மீண்டு வந்தன. தற்போது எரிமலையால், விமானப் போக்குவரத்து மீண்டும் பெரும் நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளதால் நிறுவனங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

ஜோகன்னஸ்பர்க் வழியாக வருகிறார் பிரதமர்

எரிமலை சாம்பல் பிரச்சினையால், பிரேசில் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவரது பயணத் திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின்படி அவர் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சென்று அங்கிருந்து இந்தியா திரும்புகிறார். நேற்றுடன் தனது எட்டு நாள் அமெரிக்க மற்றும் பிரேசில் பயணத்தை மன்மோகன் சிங் முடித்துக் கொண்டார்.

இன்று மாலை வாக்கில் பிரதமர் டெல்லி திரும்புகிறார். முந்தைய திட்டத்தின்படி பிரேசிலியாவிலிருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்குச் சென்று அங்கு சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் டெல்லி திரும்புவதாக இருந்தது.

டெல்லியில் தவித்த பயணிகள்

இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அங்கு செல்ல வேண்டிய பயணிகள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தவிப்புக்குள்ளானார்கள்.

எப்போது விமானங்கள் செல்லும் என்பது தெரியாமல் அனைவரும் விசாரணை அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இதேபோல மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் 900 பயணிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *