ஐதராபாத்:முக்கிய தலைவர்களின் தொலைபேசி பேச்சை ஒட்டுக் கேட்டது தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்க்கட்சியினர் வற்புறுத்தினர். ஆனால், இந்த பிரச்னைக்கு விசாரணை தேவையில்லை, என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார்.
இது குறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குறிப்பிடுகையில், ‘கடந்த காலங்களில் என்னுடைய பேச்சும் ஒட்டுக் கேட்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தொலைபேசியை ஒட்டுக்கேட்பது அதன் வாடிக்கையாகி விட்டது. முக்கிய தலைவர்களின் பேச்சை ஒட்டுக்கேட்பது அநாகரிகமானது. டெலிபோன் பேச்சை ஒட்டுக் கேட்பது யார்? என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தண்டிக்கப்படவேண்டும். இதன் மூலம் இந்த செயல் எதிர்காலத்தில் நடக்காதபடி தடுக்கப்படும். எனவே, பார்லிமென்ட் கூட்டுக் குழு மூலம் இந்த பிரச்னையை விசாரிக்க வேண்டும். அப்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும்’ என்றார்.
Leave a Reply