கொழும்பு, ஏப்.22: சட்டத்திற்கு புறம்பாக தான் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்ற துவக்க நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இதைத்தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் பேசியது:
இலங்கையில் தனி மனித சுதந்திரமும், பத்திரிகை சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நான் ஆதரவளிப்பேன். ஜனநாயக உரிமைப்படி தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இங்கு ஏராளமானோர் சட்ட விரோதமாக கைது செய்யப்படுகிறார்கள். அதில் நானும் ஒருவர் என்றார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பொன்சேகா வெற்றி பெற்றார்.
÷பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை காலை நாடாளுமன்றத்திற்கு வந்தார் பொன்சேகா. அவர் தேசிய உடையான காலர் இல்லாத வெள்ளை நிற குர்தாவும், வேட்டியும் அணிந்திருந்தார். நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பிரமுனா கட்சியின் மூத்த உறுப்பினர் அல்லி அனுராவுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.
கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்திய பொன்சேகா, ஆட்சியை கவிழ்க்க முயன்றது உள்ளிட்ட இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Leave a Reply