ஊட்டி:மிஸ்டர் தமிழ்நாடு 2010′ போட்டியில்வென்ற இளைஞர், வசதியில்லாத காரணத்தால், தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி(22). இவரது தந்தை ராஜன், காய்கறி ஏற்றி, இறக்கும் தொழிலாளி; தாய் பழனியம்மாளும் கூலி வேலை செய்கிறார். பிளஸ் 2 படித்த முனுசாமி, தள்ளுவண்டியில் காய்கறி விற்று வருகிறார்.
வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவர், ஊட்டி அண்ணா ஸ்டேடியத்தில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வப்போது ஆணழகன் போட்டியிலும் பங்கேற்பார்.’மிஸ்டர் ரோனீ கோமென் 2007′ என்ற போட்டியில் நீலகிரி மாவட்ட ஆணழகனாக தேர்வான முனுசாமிக்கு, திருப்பூரில் நடந்த ‘ஈஸ்ட் தமிழ்நாடு’ போட்டியில் சிறப்பு பரிசும், ஊட்டியில் நடந்த போட்டியில் முதலிடமும் கிடைத்தது. ‘மிஸ்டர் கொங்கு நாடு 2009′ போட்டியில் முதலிடம் பெற்று, சவுத் தமிழ்நாடு’ என்ற பட்டமும், 2009 மே மாதம் கோவையில் நடந்த போட்டியில், ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டமும் பெற்றார்.
தென்னிந்திய ஆணழகன் போட்டியில் முதலிடம் பெற்று, ‘சவுத் இந்தியா’ பட்டமும் பெற்றார்.ஜனவரி 24ல் திருச்சியில் நடந்த, ‘மிஸ்டர் தமிழ்நாடு 2010’ போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்று, ‘மிஸ்டர் தமிழ்நாடாக’ தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து போட்டிகளில் பங் கேற்க அவருக்கு வருமானம் போதவில்லை. தேசிய, சர்வதேச போட்டிக்கு அழைப்பு வந்தும், கலந்து கொள்ள முடியாத சோகம் ஏற்பட்டுள்ளது.
‘யாராவது உதவினால், மேலும் பல சாதனை புரிய உதவியாக இருக்கும்’ என்கிறார் முனுசாமி. அவர் கூறுகையில், ”பொருளாதார நிலையால் பல சாதனைகளை நிகழ்த்த முடியாத சூழ்நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. ஏதாவது, ‘ஸ்பான்சர்’ கிடைத்தால் தேசிய, சர்வதேச சாதனைகளை நிகழ்த்தி நீலகிரிக்கும், நம் நாட்டுக்கும் பெருமை சேர்ந்து தருவேன்,” என்றார்.
Leave a Reply