ராமநாதபுரம்: சேதுசமுத்திர திட்ட வழக்கு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதை பணி தொடர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்திய கடல் போக்குவரத்தை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட சேதுசமுத்திர திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணையில் உள்ளது. மாற்றுப் பாதையை கண்டறியுமாறு, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியது. இதற்காக அமைக்கப்பட்ட பச்சோரி கமிட்டி, அதற்கான பணிகளை ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் துவங்கி உள்ளது.
மாற்றுப் பாதை ஆய்வு பணிகளின் நிலை குறித்து, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. கடலில் அலை அதிகம் இருப்பதால், ஆய்வுப் பணியில் தாமதம் உள்ளதாக, சொலிசிட்டர் ஜெனரல் ஹரின்ராவனல் கோர்ட்டில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஆய்வு அறிக்கையை அடுத்த ஆண்டு பிப்., முதல் வாரத்தில் சமர்ப்பிக்குமாறும், அது வரை இவ்வழக்கு ஒத்துவைக்கப்படுவதாகவும், நீதிபதிகள் தெரிவித்தனர். தற்போது தென்மாவட்டங்களில், கடுமையான கோடை காலம் நிலவிவருகிறது. கடலின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகளவில் உள்ளது. கடலில் அலை குறைந்துள்ளது. இப்படியிருக்கும் போது கடலின் சீற்றம் அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
இது ஒருபுறமிருக்க, கோடை முடிந்து அடுத்த மழைக்காலம் துவங்கினால், வழக்கத்தை விட அதிகளவில் அலையும், புயலும் அடிக்கடி நிகழும். கோடையிலேயே ஆய்வுக்கு பாதிப்பு இருக்கும் போது, மழைக்காலத்தில் எப்படி ஆய்வு நிறைவு பெறும்? கோர்ட் குறிப்பிட்டது போல பிப்., வரை மழை பொழிவு இருக்கும் என்பதால், நிச்சயம் அந்த மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்புகள் மிகவும் குறைவு. தற்போது நடந்து வரும் ஆய்வு பணி மேம்போக்காகவே நடந்து வருகிறது. இதை வைத்து பெரிய அளவில் அறிக்கை தயார் செய்ய இயலாது; இதனாலேயே கடல் அலையின் சீற்றத்தை காரணம் காட்டி, மத்திய அரசு வழக்கை ஒத்திவைக்க செய்துள்ளது என்பது, சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பிட்ட காலத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில், மேலும் கால அவகாசம் கேட்கப்படலாம். அடுத்து ஏப்., துவங்கும் போது, மீண்டும் கடல் சீற்றம் எனக் கூறி, ஆய்வை தள்ளிப்போட வாய்ப்புள்ளது.
Leave a Reply