ஜெயலலிதாவின் லட்சியம் கொடநாடு. தமிழக முதல்வர் கருணாநிதியின் லட்சியம் தமிழ்நாடும், அதன் முன்னேற்றமும் என வேலூரில் நேற்றிரவு நடந்த பிரமாண்ட கூட்டத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
வேலூர் மாவட்ட தி.மு.க சார்பில் பட்ஜெட் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் வேலூரில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:
தி.மு.க. தொண்டனாக இருந்தபோதும் வேலூருக்கு வந்துள்ளேன். இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மேயராக, திமுக துணை பொதுச்செயலாளராக, பொருளாளராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்வராக என பல்வேறு பொறுப்புகளை ஏற்ற நிலையில் பலமுறை வேலூருக்கு வந்துள்ளேன். எத்தனையோ முறை வேலூருக்கு வந்தாலும் உங்களில் ஒருவனாக எப்போதும் வர வேண்டும் என்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி.
பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டமாகவும், பென்னாகரம் இடைத்தேர்தல் வெற்றி விழாவாகவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, 2 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையில் இயங்கும் அதிமுக பென்னாகரம் தேர்தலில் டெபாசிட் இழக்கக்கூடிய வகையில் முடிவு வந்துள்ளது.
திமுக ஆட்சியைப் பார்த்து மைனாரிட்டி அரசு என்று தொடர்ந்து சொல்லிவருகிறார். இனி ஜெயலலிதா மைனாரிட்டி திமுக அரசு என்று கூறினால், டெபாசிட் இழந்த அதிமுக என்று நம்மால் சொல்ல முடியும். வெற்றியால் வெறிகொள்ளும் இயக்கமல்ல திமுக. தோல்வியால் துவண்டுவிடும் இயக்கமும் அல்ல. வெற்றி, தோல்வியை சமமாக கருதுபவன் தான் திமுக தொண்டன்.
தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று கூறும் எத்தனையோ கட்சிகள் உள்ளன. ஆட்சிக்கு வந்தால் எதையும் செய்யமாட்டார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றிய முதல்வர் கருணாநிதிதான்.
ஆட்சிக்கு வந்தால் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பேன் என்றார். ஆனால் இது முடியாது என்றும், சாத்தியமில்லை என்றும் ஜெயலலிதா கூறினார். ஆட்சிக்கு வந்து பதவியேற்பு விழா மேடையிலேயே முதல் கையெழுத்தாக, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்க கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டார். இப்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. விவசாய கடன் 7 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தார்.
ஏழைப்பெண்கள் திருமணத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை 89ல் கருணாநிதி தொடங்கினார். ஆனால் அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இந்த திட்டத்தையே நிறுத்திவிட்டார். மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் அந்த திட்டத்தை நிறுத்தினார். இந்த அம்மையாருக்கு திருமணம் என்றாலே பிடிக்காது. 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் திருமண நிதியை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார். தற்போது தமிழக பட்ஜெட்டில் இது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.
2010&11ம் ஆண்டுக்கு 66 ஆயிரத்து 480 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று விழுப்புரத்தில் ஜெயலலிதா ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனால் அவர் முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய்கூட கரும்பு விலையை உயர்த்தவில்லை.
இப்போது திமுக ஆட்சியில் கரும்புக்கு போக்குவரத்து, ஊக்கத்தொகை சேர்த்து டன் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. 10 மளிகை பொருட்கள் 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. உணவு மானியமாக இந்த பட்ஜெட்டில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடந்த 4 ஆண்டில் தமிழகத்தில் 37 புதிய தொழிற்சாலைகள் வந்துள்ளது. இதனால் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்துக்கு வந்துள்ளது. 2 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக அடிக்கடி கொடநாடு சென்றுவிடுவார்.தேர்தலுக்கு மட்டும் விமானத்தில் வந்துவிட்டு, மீண்டும் கொடநாடு சென்றுவிடுவார். கொடநாடுதான் ஜெயலலிதாவின் லட்சியம். ஆனால் தமிழ்நாடுதான் கருணாநிதிக்கு லட்சியம். மக்கள் நலன்தான் முக்கியம் என்று 86 வயதிலும் பாடுபட்டு வருகிறார். அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், வேணுகோபால் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply