புதுச்சேரி, ஏப். 20: புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளில் நடப்பு ஆண்டில் அரசுக்கு 50 சதவீதம் இடங்கள் பெறப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் இ. வல்சராஜ் கூறினார்.
சட்டப்பேரவையில் இது குறித்து அதிமுக உறுப்பினர் ஆ. அன்பழகன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் வல்சராஜ் அளித்த பதில்:
புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 4 நிகர்நிலைப் பல்கலைகழகங்களாக உள்ளன. மொத்தம் 7 கல்லூரிகளில் 4 கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகள் இருக்கின்றன. மொத்தம் 130 முதுநிலைப் படிப்பு இடங்கள் இருக்கின்றன. 2 ஆண்டுகளாக இந்த மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகள் இருக்கின்றன. இதுவரை இந்தப் படிப்புகளில் இட ஒதுக்கீடு பெறவில்லை. நடப்பு கல்வியாண்டில் மொத்தம் உள்ள இடங்களில் 50 சதவீதம் இடங்கள் அரசுக்குப் பெறப்படும் என்றார் அமைச்சர். நடப்பு கல்வியாண்டு முதல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் 50 சதவீதம் இடங்கள் பெறப்படும். மேலும் இக் கல்லூரிகளில் உள்ள டிப்ளமோ படிப்புகளில் கிராமப்புறத்தில் பணியாற்றும் அரசு டாக்டர்கள் படிக்க வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் படித்து முடித்தப் பிறகு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. அதையும் பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் அமைச்சர் வல்சராஜ்.
Leave a Reply