இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, புலிகளின் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சாவடைந்த நிலையில், மலேசியாவிற்கு சென்றிருந்த விடுதலைப் புலிகளின் தலைவரின் தாயார் பார்வதி அம்மையார், சிகிச்சைக்காக இந்தியா சென்றபோது சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டு, சுயமாக நடமாட முடியாதளவிற்கு படுத்த படுக்கையாக இருக்கும் அவர், சென்னையில் இருந்து நாடு கடத்தப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதேவேளை, இவரை சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள தமிழகத்திற்குள் நுழைவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த வன்னியரசு உட்பட தமிழின உணர்வாளர்கள் பலர் சென்னை விமான நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து அவர் மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, இது இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதி என்றும் தெரிவித்துள்ளது.
Leave a Reply