ஆவடி:”நாட்டின் முதல் விரோதிகளான நக்சல்வாதிகளை, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முற்றிலுமாக அடக்கி விடுவோம்,” என, மத்திய நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
சென்னை அடுத்த ஆவடியில், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், 125வது ஆண்டு விழா மற்றும் 2010- 2011ம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், வள்ளல் பெருமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:நாட்டின் வளர்ச்சி காங்கிரஸ் கட்சிக்கு பெரிய ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது. காங்கிரஸ், சுதந்திரத்திற்கு முன் உருவான கட்சி. மக்களுக்கான திருப்புமுனை ஏற்படும் போதெல்லாம், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. அதற்காக, இடையில் வந்து சென்ற கட்சிகள் எல்லாம், எதையும் செய்யவில்லை என்று சொல்லவில்லை. வாஜ்பாயை தவிர்த்து பிரதமர்களாக இருந்த பலரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும், அடிப்படையில் காங்கிரஸ் உணர்வு கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.
இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ராணுவத்திற்காக ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. அதற்கு காரணம் நம்மைச் சுற்றி உள்ள நாடுகள் நல்லெண்ணம் கொண்டவையாக இல்லாததுதான். குறிப்பாக பாகிஸ்தான், சீனா. இதில் பாகிஸ்தான் வன்முறையாளர்களையும், பயங்கரவாதிகளையும் உருவாக்கி இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்து அமைதியை கெடுக்க திட்டமிடுகிறது. பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இயங்கி வருகிறது.
அடுத்து உள்நாட்டு பாதுகாப்பிற்காக, 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள நக்சல் வாதிகள் ‘தனி நாடு’ கேட்டு அச்சுறுத்தலையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருகின்றனர். ஏழைகளின் நண்பன் என்று கூறிக்கொள்ளும் நக்சல்வாதிகள், நாட்டு மக்களின் முதல் எதிரிகள். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், நக்சல்வாதிகளை முற்றிலுமாக அடக்கி விடும்.இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
Leave a Reply