சென்னை, ஏப்ரல் 1: திமுக தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவேன் என்று மு.க.அழகிரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
திமுக தென் மண்டல பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்று சென்னை திரும்பினார்.
இதன் பிறகு சென்னையில் இருந்து அவர் வியாழக்கிழமை பகல் 12.30 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“கருணாநிதிக்குப் பிறகு யாரையும் தலைவராக நான் ஏற்க மாட்டேன்; அவர் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கு இருப்பதாகத் தெரியவில்லை’ என்று ஏற்கெனவே நான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் எண்ணுவதைக் கூறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. என் மனசாட்சிப்படிதான் இது தொடர்பாக முதன்முதலில் எனது கருத்தைக் கூறினேன்.
தி.மு.க.வில் ஜனநாயக ரீதியில் கட்சி மூலம் மட்டுமே தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதை ஏற்கிறேன். திமுக ஜனநாயகக் கட்சி என்பதால், கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டால் நான் போட்டியிடுவேன். அதற்கு இப்போது அவசியம் இல்லை.
ஏனெனில், திமுக தலைவராக முதல்வர் கருணாநிதி இருப்பதால், அந்தப் பதவி பற்றி பேசத் தேவையில்லை. இப்போது மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருக்கிறார். எதிர்காலத்தில் கட்சிக்கு தேவைப்பட்டால் நான் போட்டியிடுவேன் என்றார் அழகிரி.
வாரிசு பிரச்னை ஆரம்பித்தது எப்படி? கடந்த வாரம் அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பு மத்திய அமைச்சர் அழகிரி வார இதழுக்குப் பேட்டி அளித்தார். “அண்ணாவுக்குப் பிறகு அப்போதும் இப்போதும் எப்போதும் முதல்வர் கருணாநிதி மட்டுமே எனக்குத் தலைவர்; தலைவர் கருணாநிதிக்குப் பிறகு, தி.மு.க.வில் யாரையும் நான் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியைக் கேட்டபோது, “எனக்குப் பிறகு எந்த ஆண்டு முதல்… என்பதே எனக்குத் தெரியாது; அழகிரியிடமே கேளுங்கள்’ என்றார். எனினும் கடந்த மார்ச் 28-ம் தேதியன்று பெரம்பூர் மேம்பால திறப்பு விழாவில் “நான் நினைத்ததை அப்படியே செய்து முடிப்பவர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்’ என்று முதல்வர் கருணாநிதி ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து வார இதழ் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி அண்மையில் அளித்த பேட்டியில் “அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் உரசல் எதுவும் இல்லை; அப்படி அவர்கள் உரசிக் கொண்டால் அதனால் ஏற்படும் காயமும் அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்துக்குத்தான்’ என்று கூறியுள்ளார்.
மதுரையில் அழகிரி: சென்னையிலிருந்து வியாழக்கிழமை விமானம் மூலம் மதுரைக்குச் சென்ற மத்திய அமைச்சர் அழகிரி, “அரசு முறை ஆஸ்திரேலியப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது’ என்று மட்டும் செய்தியாளர்களிடம் கூறினார். சென்னையில் அளித்த பேட்டி பற்றிய விஷயங்களை மீண்டும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply