திருவாரூர்:திருவாரூரில் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.திருவாரூரில் 100 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இதில் முதல் கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு கடந்த பிப்., 16ம் தேதி முதல் புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, கல்லூரி, நூலகம், விடுதிகள் கட்டுமான பணிகள் நடக்கின்றன.இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரி துவங்கப்பட வேண்டுமென அனைத்து பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 27, 28ம் தேதிகளில் திருவாரூக்கு மத்திய மருத்துவ ஆய்வுக்குழு வருகை செய்து முதல் கட்ட ஆய்வு நடத்தியது.
இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். கலெக்டர் சந்திரசேகரன், அமைச்சர் மதிவாணன், நாகை எம்.பி., விஜயன், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் பாஸ்கரன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.அப்போது மத்திய மருத்துவ ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ள குறைபாடுகளை களைவது குறித்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறியதாவது:திருவாரூர் மருத்துவக் கல்லூரி துவங்க தேவையான அனைத்து கட்டட வசதிகளும் வரும் 30ம் தேதிக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்துள்ளனர். கட்டுமான பணியில் மீதமுள்ள வேலைகளுக்கு கூடுதல் ஆட்கள் நியமித்து விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.இந்த ஆண்டு கண்டிப்பாக மருத்துவக் கல்லூரி துவங்கப்படும். மாணவர் சேர்க்கையும் நடக்கும். முதல்வர் கருணாநிதி திருவாரூர் மற்றும் விழுப்புரம் கல்லூரிகளை இந்த ஆண்டே துவங்க வேண்டும் என மத்திய மருத்துவ ஆய்வுக்குழு மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதனால் இந்த ஆண்டு கட்டாயம் மருத்துவக் கல்லூரி துவங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
Leave a Reply