திறந்தநிலை பல்கலை பட்டம் வாங்கினால் அரசு வேலை கிடைக்குமா?

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_30286806822சென்னை:”எஸ்.எஸ்.எல்.சி., படிக்காமல் திறந்தநிலை பல்கலைகளில் பட்டம் பெறுவோரை அரசு வேலையில் நியமிக்க முடியாது,” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

பட்ஜெட் மீது சட்டசபையில் நேற்று நடந்த பொது விவாதம்:

பாலபாரதி – மார்க்சிஸ்ட்: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 50 லட்சம் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி கைதாகி உள்ளனர். மத்திய அரசின் பட்ஜெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் வரி கிடைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் பருப்பு பதுக்கப்படுகிறது. பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று என்ன தான் போக்குவரத்து அமைச்சர் சட்டசபையில் சொன்னாலும், கட்டணம் உயர்ந்துள்ளது.

அமைச்சர் நேரு: மதுரை, கோவை, சென்னை நகரங்களில் தான் தாழ்தள பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த பஸ்களுக்கு தான் கூடுதல் கட்டணம். மற்ற எந்த மாவட்டத்திலும், பஸ் கட்டணம் அதிகமில்லை.முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு, இரண்டு வகையான கட்டணம் மட்டுமே நிர்ணயிக்க உத்தரவிட்டார். அதன்படி. கி.மீ.,க்கு 28 காசு, 32 காசு ஆகிய இரண்டு கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. எங்காவது கூடுதல் கட்டணம் வசூலித்தால், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலபாரதி: போலி மருந்து மீனாட்சி சுந்தரம் மட்டுமின்றி, நிர்வாகத்திலும் பல மீனாட்சி சுந்தரங்கள் இருக்க வாய்ப்புள்ளது. விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி வெளிநடப்பு செய்கிறது.

சிவபுண்ணியம் – இந்திய கம்யூனிஸ்ட்: கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் ஒரு வீட்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் என்பதை அதிகமாக்க வேண்டும். வீட்டுவசதி சங்கங்களின் கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி சலுகை 31ம் தேதியுடன் முடிந்ததால், ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். அசல் மட்டும் செலுத்தும் வாய்ப்பை வழங்க வேண்டும்.

அரசு கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்க, தேர்வு எழுதச் சொல்லி, அதற்கான வாய்ப்பில்லாமல் செய்துவிட்டனர். நாமே கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கிறோம். அவர்களிடம் படித்து, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். 10 ஆண்டுகள் பணி முடித்த அவர்களை, உரிய சட்டம் மூலம் நிரந்தரமாக்க வேண்டும்.

திறந்தநிலை பல்கலைகளில் படித்தவர்கள் அரசுப் பணியில் சேர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நேரடி பல்கலைகளில் படித்த மாணவர்களை விட இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். திறந்தநிலை பல்கலைகளில் படித்தவர்களின் கதி என்ன?

அமைச்சர் பொன்முடி: எஸ்.எஸ். எல்.சி., படிக்காமல் கூட, திறந்தநிலை பல்கலையில் எம்.ஏ., எழுத முடியும். அவ்வாறு எஸ்.எஸ். எல்.சி., படிக்காமல் பட்டம் பெற்றவர்களை அரசுப் பணியில் நியமிக்கக் கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இந்த பட்டத்தை கொண்டு பணியில் சேர்ந்தவர்களை, முடிந்தளவு தக்க வைக்க உள்ளோம். அதே நேரத்தில், புதிய நியமனங்களில் இவர்களை நியமிக்க முடியாது.

சிவபுண்ணியம்: வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் தான் அந்த கோர்ட் தீர்ப்பு பொருந்தும். இல்லையென்றால், எதற்காக திறந்தநிலை பல்கலைகள் உள்ளன. டி.என். பி.எஸ்.சி., தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற பின், அவர்கள் திறந்தவெளியில் பட்டம் பெற்றவர்கள் என்று கூறி, வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

அமைச்சர் பொன்முடி: திறந்தநிலை பல்கலைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு, பதவி உயர்வு கூட அளிக்கக் கூடாது என ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வீட்டில் இருப்பவர்கள் பட்டம் பெற விரும்பினால், அதற்காக பயன்படுவது தான் திறந்தவெளி பல்கலைகள். மற்றவர்களுக்கு ஏராளமான கல்லூரிகள் உள்ளன. மாலை நேரக் கல்லூரிகள் உள்ளன. ஏற்கனவே நியமித்தவர்களை வீட்டுக்கு அனுப்ப சொன்னார்கள். முதல்வர் தான் அதை தள்ளி வைத்துள்ளார்.

சிவபுண்ணியம்: கோர்ட்கள் மக்களுக்கு எதிராகவே பல கட்டங்களில் தீர்ப்பு அளித்துள்ளன. கோர்ட் தீர்ப்பை ஆண்டவன் தீர்ப்பு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. விலைவாசி உயர்வைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.(இவ்வாறு கூறிவிட்டு, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறத் துவங்கினர்).

முதல்வர் கருணாநிதி: விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று கூறிவிட்டு, தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதில் என்ன பொருத்தம் உள்ளது.சிவபுண்ணியம்: இந்தியா முழுக்க கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மறியல் செய்கின்றனர். ஆளுங்கட்சியும் மத்திய அரசில் இடம்பெற்றுள்ளது. மறியல் செய்யவே, வெளிநடப்பு செய்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *