ஈரோடு: ”எந்த இயக்கத்திலும் தொண்டர்கள் தங்களை அழித்துக் கொள்ள கூடாது. தோல்வியைத் தாங்கி எதிர்த்து போராடும் தைரியம் இருக்க வேண்டும்,” என, வைகோ பேசினார்.ம.தி.மு.க., சார்பில் மே 28ல் நடக்கும் கேரள எல்லை முற்றுகைப் போராட்டம் குறித்து விளக்குவதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஈரோடு மாவட்டத்தில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஈரோடு காளைமாட்டு சிலை அருகே நேற்று மாலை நடந்த துவக்க விழாவில் வைகோ பேசியதாவது:எதிர்கால தமிழர்களின் வாழ்வாதாரம் காக்கவே இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான முல்லை பெரியாறு அணையை உடைக்கவும், தாராபுரம், கரூர் பகுதிக்கு குடிநீர், பாசனத்துக்கு ஆதாரமான அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டவும் கேரள அரசு முயற்சி செய்கிறது. அடுத்ததாக பவானியாற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக மக்களின் முக்கிய நீராதாரங்களை பாழ்படுத்தும் கேரள அரசை கண்டித்து மே 28ல் கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படும். இதற்காக மக்களின் ஆதரவை திரட்டவே இந்த சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ளோம்.
அ.தி.மு.க., தோல்வியைத் தாங்காமல், அ.தி.மு.க., தொண்டர் தீக்குளித்தது வேதனையளிக்கிறது. இயக்கத்தின் அஸ்திவாரமாக, தங்களுக்கு என்ன கிடைக்கும் என நினைக்காமல் இருப்பவர்கள்தான் தொண்டர்கள். உடல், மனம் கருகிய நிலையில், பார்க்க முடியாத அளவுக்கு அவர் உடல் சிதைந்து கிடக்கிறது. எந்த இயக்கத்திலும் தொண்டர்கள் தங்களை அழித்துக் கொள்ள கூடாது. தோல்வியை தாங்கிக் கொண்டு எதிர்த்து போராடும் தைரியம் இருக்க வேண்டும்.பென்னாகரம் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுக்களை விட 1,801 ஓட்டுகள் தான் ஆளுங்கட்சி அதிகம் பெற்றுள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது அவர்களுக்கு 50 சதவீத ஆதரவு கூட இல்லை.மின்தடை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னையால் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அதிகம் உள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தல் முதல் பென்னாகரம் தேர்தல் வரை 10 ஆயிரத்து 500 ஓட்டுகள் தான் அதிகம் பெற்றுள்ளனர். எதிர்ப்பு ஓட்டு ஆளும் கட்சிக்கு அதிகம் உள்ளது.விவசாயம், பொருளாதாரம் காக்க ம.தி.மு.க.,வின் சுற்றுப்பயணம் தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி எம்.பி., தலைமை வகித்தார். இன்று காங்கேயம், சென்னிமலை யூனியனில் வைகோ சுற்றுப்பயணம் செய்கிறார்.
Leave a Reply