சென்னை: எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோதே அவரை விலக்கிவிட்டு, முதல்வர் [^] பதவியை தனக்கு வழங்குமாறு கேட்ட ‘உத்தம குணவதி’ தான் ஜெயலலிதா [^]. அவர் காட்டிய ‘பதி பக்தி’ இதுதான் என்று முதல்வர் கருணாநிதி [^] கூறினார்.
குடியாத்தம் அதிமுக நகர் மன்ற உறுப்பினர் ஆர்.கே.அன்பு, மற்றும் குடியாத்தத்தைச் சேர்ந்த ஏராளமான அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக தொண்டர்கள் சுமார் 3,000 பேர் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த இணைவு நிகழ்ச்சியில் நடந்தது. அவர்கள் மத்தியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இங்கே ஒரு பெரிய பையில் நீங்கள் ஏற்கனவே வைத்திருந்த (பிற கட்சிகளின்) உறுப்பினர் அட்டைகள் எல்லாம் ஆயிரக்கணக்கில் வைக்கப்பட்டு அவைகள் எல்லாம் எனக்கு முன்னால் உள்ள மேஜையில் கொட்டப்பட்டது.
அப்படி கொட்டப்படும்போது அந்த பையிலே அடைந்து கிடந்த உறுப்பினர் அட்டைகள் கொடகொடவென்று இங்கே கொட்டின. நான் எண்ணிக்கொண்டேன். அடைபட்டுக் கிடந்தது அந்த அட்டைகள் அல்ல. என் எதிரே அமர்ந்திருக்கின்ற மூவாயிரத்திற்கு மேற்பட்ட உயிரினும் மேலான உடன் பிறப்புகளை அடைத்து வைத்து- அவர்கள் இன்றைக்கு விழிப்புற்று, தாங்கள் இருக்க வேண்டிய இடம் எது என்பதை உணர்ந்து, அறிந்து, தெரிந்து, தெளிந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளீர்கள்.
உங்களை எல்லாம் அழைத்து வந்திருப்பது அன்பு. நீங்கள் என்பால் கொண்ட அன்பு. நான் உங்களிடத்திலே வைத்திருக்கின்ற அன்பு. இந்த அன்பின் பிணைப்பு, இடையிலே அமைந்த இளைஞர் அணியிலே அமைப்பாளர்களாக, அருமை தொண்டர்களாக, முன்னணியினர்களாக இருந்தவர்கள் தான் எம்.ஜி.ஆருக்கு பிறகு அங்கே இருந்தவர்கள் எம்.ஜி.ஆரை மதிக்கவில்லை, அவருக்கு தர வேண்டிய இடத்தை தரவில்லை, அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கவில்லை என்று இங்கே பேசிய அன்பு குறிப்பிட்டார்.
மரியாதை தராதது மாத்திரமல்ல, அந்த எம்.ஜி.ஆர். உடல் நலம் இல்லாமல், சரியாக பேச முடியாமல் கைகால்களை அசைக்க முடியாமல், பேசினால் என்ன பேசினார் என்று புரியாத நிலையில் உடல் நலிவுற்று அவர் சட்டமன்றத்திற்கு வந்தால் கூட அவருக்கு பதிலாக வேறு யாராவது பேசி அவர் பேசுவதை தவிர்த்து அந்த அளவிற்கு உடல் நலம் இல்லாமல் இருந்த போது, இங்கே அன்பு குறிப்பிட்டாரே, அந்த அம்மையார் ஜெயலலிதா என்ன செய்தார்?.
மதிக்காமல் இருந்தார் என்பது மாத்திரமல்ல, அவர் தமிழ்நாட்டு முதல்வராக இருக்கவே தகுதியற்றவர்- ஆகவே அவரை உடனடியாக விலக்கிவிட்டு தன்னை முதல்வராக ஆக்குங்கள் என்று அன்றைக்கு பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியவர் தான் இந்த அம்மையார் என்பதை நம்முடைய அன்பு இப்போது தான் தெரிந்துகொண்டிருக்கிறார் போலும்.
எண்ணிப் பாருங்கள்.. ஏராளமான தாய்மார்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுடைய வீட்டிலே இருக்கின்ற குடும்ப தலைவருக்கு, அல்லது அண்ணனுக்கு அல்லது தம்பிக்கு ஒரு வேளை கணவருக்கே கூட உடல் நலம் இல்லாமல் இருந்து மிகவும் கஷ்டப்படும்போது என்ன செய்கிறீர்கள்?. அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், மாரியம்மன், காளியம்மனுக்கு வேண்டிக் கொள்வீர்கள்.
கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து கொள்வீர்கள். அந்த ஊரிலே இருக்கின்ற பெரியவர்களிடம் இருந்து அய்யா எங்களுடைய வீட்டுப் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று பிரார்த்தனை செய்வீர்கள், வேண்டுவீர்கள். உங்களுடைய துடிப்பை வெளிப்படுத்துவீர்கள்.
இதுதான் சாதாரண கிராமங்களிலே கூட, நம்மை போன்றவர்கள் வீடுகளிலே நடைபெறுகின்ற காரியம். ஆனால் அவர் தான் தனக்கு எல்லாம் என்று அவரால் விவரிக்கப்பட்டவரை, தன்னை ஒரு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவே ஆக்கியவரை, ஒரு கட்சியின் முன்னணி தலைவராக மாத்திரமல்ல, அந்த கட்சியை இஷ்டப்படி நடத்தக் கூடிய சர்வாதிகாரியாகவே ஆக்கி வைத்தவரை, கொஞ்சம் கூட நன்றியில்லாமல், அவர் உயிரோடு இருக்கும்போதே அவரை விலக்கிவிட்டு, அந்தப் பதவியை எனக்குக் கொடு என்று கேட்ட உத்தம குணவதி தான் ஜெயலலிதா என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
இந்த அம்மையார் யார் யாரையோ பார்த்து `பதி பக்தி இல்லாதவர்’ என்று சொன்னார். ஆனால் இவர் காட்டிய பதி பக்தி இதுதான். கணவரை போன்றவருக்கு ஒரு நோய் நொடி என்றதும், அவருக்கு வேலையே வேண்டாம், வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று சொன்ன உத்தமி- இதுவரை அன்பு போன்றவர்களின் கண்களுக்கு இவைகள் எல்லாம் படாமல் இருந்திருக்கிறதே… இந்த விஷயங்கள் அன்பு போன்றவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறதே என்பது தான் எனக்கு ஆச்சரியமே தவிர வேறொன்றும் இல்லை.
என்னமோ, இன்றைக்காவது அன்பு போன்றவர்களுக்கு கண் திறந்து, இந்த நாட்டை காப்பாற்ற ஏழை எளிய மக்களுக்கு தொண்டாற்ற இருக்க கூடிய ஒரே இயக்கம் அண்ணா கண்ட திராவிட முன்னேற்ற கழகம் தான் என்று உணர்ந்து இங்கே வந்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து வருக வருக- உங்களுடைய ஆதரவை தொடர்ந்து இந்த இயக்கத்திற்கு தருக தருக என்று கூறி இத்தனை நாளும் சாலையிலே போகும்போது இந்தப் பக்கம் திரும்பி பார்த்துவிட்டு போன அறிவாலயத்தில் உள்ளே அமரக் கூடிய உரிமை உங்களுக்கு இன்று முதல் ஏற்பட்டிருக்கிறது என்றார் முதல்வர் கருணாநிதி.
புதிய சட்டமன்ற வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் [^]:
இந் நிலையில் சட்டடமன்ற வளாகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடந்தது.
இது இந்த அமைச்சரவையின் 45வது கூட்டமாகும். இதில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Leave a Reply