நிலக்கரி இறக்குமதி முறைகேட்டை கருணாநிதியால் மறுக்க முடியுமா? ஜெயலலிதா கேள்வி

posted in: அரசியல் | 0

6jaya1சென்னை, ஏப்.5: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்ற முறைகேடுகளை கருணாநிதியால் ஆதாரத்துடன் மறுக்க முடியுமா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நிலக்கரி இறக்குமதி தொடர்பாக நான் விடுத்த அறிக்கைக்கு முதல்வர் கருணாநிதி மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 2009}2010}ல் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மதிப்பு ரூ.1,000 கோடிதான் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டிற்கு சுமார் 1 கோடியே 30 லட்சம் டன் நிலக்கரி வீதம், மொத்தம் 6 கோடியே 80 லட்சம் டன் நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்துள்ளது. டன் ஒன்று 54 அமெரிக்க டாலர் முதல் 120 அமெரிக்க டாலர் வரை பல்வேறு விலைகளில் வாங்கியுள்ளது.

குறைந்தபட்ச விலையான 54 அமெரிக்க டாலரை எடுத்துக் கொண்டாலே, ஒவ்வொரு ஆண்டிலும் இறக்குமதி செய்த நிலக்கரியின் மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடியைத் தாண்டிவிடும். உண்மை இவ்வாறு இருக்க, 2009}2010}ல் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மதிப்பு ரூ.1,000 கோடிதான் என்று கருணாநிதி பேசுகிறார்.

2010}ல் ஒரு டன் நிலக்கரி 120.5 அமெரிக்க டாலர் என்ற விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, 1 கோடியே 30 லட்சம் டன் நிலக்கரியின் விலை வெறும் ரூ.1,000 கோடி மட்டும்தானா?

2010 பிப்ரவரியில், ஒரு டன் நிலக்கரி 65 அமெரிக்க டாலர் என்ற விலையில், 6,100 முதல் 6,300 வெப்பத் திறன் வரை உடைய நிலக்கரியை விநியோகம் செய்வதற்கான விலைப்புள்ளியை, இம்பெக்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து மின்சார வாரியம் பெற்றது.

டாரியன் அயர்ன் மற்றும் ஸ்டீல் என்ற நிறுவனம் 6,100 வெப்பத் திறன் கொண்ட நிலக்கரி 57 அமெரிக்க டாலர், 6300 வெப்பத் திறன் கொண்ட நிலக்கரி 65 டாலர், 6500 வெப்பத் திறன் கொண்ட நிலக்கரி 73 டாலர் என்ற விலையில் தர முன்வந்தது.

கப்பல் சரக்கு கட்டணம் 20 டாலரைச் சேர்த்தால், அதிக வெப்பத் திறன் கொண்ட நிலக்கரியின் விலை இங்கு வந்து சேரும்போது 93 அமெரிக்க டாலராக இருக்கும்.

ஆனால், 6000 வெப்பத் திறன் கொண்ட நிலக்கரியை டன் 120 அமெரிக்க டாலருக்கு மின்சார வாரியம் வாங்கியிருக்கிறது. இதை கருணாநிதியால் மறுக்க முடியுமா?

ஒரே வெப்பத் திறன் கொண்ட நிலக்கரி 77 அமெரிக்க டாலருக்கு கிடைக்கும்போது, அதை 120 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்குவதால் மின்சாரம் வாரியத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்பதை கருணாநிதியால் விளக்க முடியுமா?

கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்புள்ள இந்தோனேசிய நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்குமதி உத்தரவு அளிக்கப்பட்டதை கருணாநிதி மறுக்கவில்லை. ஆனால் மத்திய அரசின் எம்.எம்.டி.சி. நிறுவனம் மூலம்தான் நிலக்கரி இறக்குமதி நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.

இறக்குமதியை யார் கையாள்கிறார்கள் என்பது பிரச்னை அல்ல. இறக்குமதிக்கான உத்தரவு எந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது என்பதுதான் பிரச்னை.

நம்பகமான இடத்திலிருந்து வந்த தகவல்கள் என்று நான் கூறியதை கருணாநிதி கேலி செய்துள்ளார். தி.மு.க. அரசின் செயல்பாட்டைக் கண்டு அரசு அதிகாரிகள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் அரசாங்க மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அதிகாரிகள் கொடுத்த தகவல்கள்தான் எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்கள். இந்த அறிக்கையில் உள்ள தகவல்களும் அதிகாரிகள் கொடுத்தவைதான். இதற்கு என்ன அர்த்தம் என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *