லண்டன், மார்ச் 31: நிலநடுக்கம் ஏற்படப்போவதை சுமார் 5 நாட்களுக்கு முன்னதாகவே அறியும் சக்தி தேரைகளுக்கு உண்டு என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களை அவை ஏற்படப்போவதற்கு முன்னதாகவே அறியும் சக்தி நாய், பூனை, பாம்பு, கோழி போன்ற விலங்குகளுக்கு உண்டு என காலம் காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் நம்பப்பட்டு வருகிறது.
ஆனாலும் அறிவியல் ரீதியாக அது சரியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், தேரைகள் நிலநடுக்கம் ஏற்படப்போவதை சில நாள்கள் முன்னதாகவே உணரும் சக்தி கொண்டவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள திறந்த வெளிப் பல்கலைக்கழகம் விலங்குகள் மற்றும் பிராணிகளின் நடத்தை குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தாலியில் உள்ள அகுய்லா பகுதியில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம், அந்தப் பகுதியில் இருந்த 96 சதவீத ஆண் தேரைகள் அப்பகுதியை விட்டு வேறு இடங்களுக்குச் சென்று விட்டன.
மீதித்தேரைகள் இரண்டு நாள்கள் கழித்து அந்த பகுதியை விட்டுச் சென்று விட்டன. இத்தனைக்கும் அந்த பருவம் தேரைகளின் இனப்பெருக்க காலமாகும். அந்த நேரத்தில் தேரைகள் பொதுவாக வேறு பகுதிகளுக்குச் செல்லாது. ஆனால் சென்ற ஆண்டு இனப்பெருக்க காலத்தில் அவை முற்றிலுமாக கூண்டோடு வேறு இடத்திற்குச் சென்று விட்டன. புதிய தேரைகள் எதுவும் அந்தப் பகுதிக்கு வரவில்லை.
இந்நிலையில் தேரைகள் கூண்டோடு சென்ற அடுத்த 5 நாள்களில் அப்பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட்டன.
நிலநடுக்கம் வரப்போவதை முன் கூட்டியே உணர்ந்ததால் தான் அவை சென்றுள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் ராச்செல் கிராண்ட் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,
“நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக பூமியில் இருந்து ஒருவகை வாயு வெளியேறும் எனவும் புவி ஈர்ப்பு விசையில் சில மாறுபாடுகள் ஏற்படக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.
இந்த மாற்றங்களை உணரும் சக்தி, எந்த நேரமும் மண்ணோடு ஒட்டி வாழும் தேரைகளுக்கு உள்ளதாக நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்’ என்றார். லண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
Leave a Reply