ஈரோடு: ”நூல் விலை குறையும் வரை நூற்பாலைகளிடம் இருந்து நூல் வாங்குவதில்லை என, விசைத்தறியாளர்கள் முடிவு செய்துள்ளனர்,” என, தென்னிந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.
நூல் விலை உயர்வு குறித்த தென்னிந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. சங்கத் தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பருத்தி துணி நெய்வதிலும், பருத்தி துணி மற்றும் பருத்தி ஆடைகள் ஏற்றுமதி செய்வதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. லட்சக்கணக்கான நெசவாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். சமீப காலமாக பருத்தி நூல் விலையை நூற்பாலைகள் ஏற்றி வருகின்றன. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் பருத்தி நூல் விலை 50 முதல் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. சாதாரண மக்கள் பயன்படுத்தக் கூடிய லுங்கி, சேலை, துண்டு போன்ற ரகங்களின் விலை மிகவும் அதிகமாகி விட்டது. ஏற்றுமதி செய்யும் துணிகளின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே வாங்கிய, ‘ஆர்டர்’களை நெய்ய அதிக விலை கொடுத்து நூல் வாங்குவதால் விசைத்தறியாளர்கள் நஷ்டமடைகின்றனர். புதிய, ‘ஆர்டர்’களை ஏற்க முடியவில்லை.
மத்திய அரசு பருத்தி நூல் ஏற்றுமதிக்கு கொடுத்து வந்த ஊக்கத் தொகையை விலக்கிக் கொண்டது. கச்சாபருத்தி ஏற்றுமதிக்கு வரி சுமத்தப்படும் என்றும் கூறியுள்ளது. உயரழுத்த மின்சாரத்தில் ஓட்டப்படும் விசைத்தறிகள், தினமும் 12 மணி நேரம் ஜெனரேட்டர் மூலம் ஓட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், யூனிட்டுக்கு 12 ரூபாய் அதிகம் செலவாகிறது. இதனால் விசைத்தறியாளர்கள் பெரும் நஷ்டப்படுகின்றனர். தடையில்லாமல் மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையாக உயர்ந்த நூல் விலை குறையும் வரை, நூற்பாலைகளிடம் இருந்து நூல் வாங்குவதில்லை என்று விசைத்தறியாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். இவ்வாறு மதிவாணன் கூறினார். சங்கரன்கோவில், ‘மாஸ்டர் வீவர்ஸ்’ தலைவர் சிவசங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply