புதுடில்லி : ”கம்ப்யூட்டர் நெட்வொர்க் மூலமாக, ராணுவ ரகசியங்கள் திருடப்படுவதை தடுக்க முப்படையினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்,” என ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கேட்டுக் கொண்டுள்ளார்.
முப்படை கமாண்டர்களின் மாநாடு டில்லியில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் அந்தோணி பேசியதாவது: இணையதளம் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொள்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதே நேரத்தில், இந்தத் தொழில் நுட்பத்தை சமூக விரோதிகளும், தேச விரோதிகளும் முறைகேடாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. உலக அளவில் சமீப நாட்களில் வியக்கத்தக்க வகையிலான, இதுவரை இல்லாத வகையிலான சில குற்றங்கள் நிகழ்ந்துள் ளன. இதன் மூலம் கம்ப்யூட்டர் குற்றங்கள் தொடர்பான பாதுகாப்பு முறைகளில் பெரிய அளவிலான இடைவெளி உள்ளது தெளிவாகிறது. இந்தியாவின் பாதுகாப்புத் துறை மற்றும் தூதரக ரீதியான கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இருந்து சில முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சீனா திருடியுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதுபோன்ற சைபர் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். கம்ப்யூட்டர் குற்றங்களை தடுக்கும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் முப்படையினர் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
கம்ப்யூட்டர் ரீதியான குற்றங் களை தடுக்க, முப்படையினரும் அனைத்து மட்டத்திலும் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சைபர் குற்றங்கள் பாதுகாப்பு கொள்கையையும் அமல்படுத்தியுள்ளனர். இருந்தாலும், இந்த விவகாரங்களில் உள்ள சில ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும். சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் இதை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. சைபர் பயங்கரவாதம் மற்றும் கம்ப்யூட்டர் ரீதியான சில தாக்குதல்களை தவிர்க்க கம்ப்யூட்டர் மற்றும் அவசரகால நடவடிக்கை குழுவினர், உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் போன்றவையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
Leave a Reply