பாகிஸ்தான் அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் சட்ட திருத்த மசோதா பார்லியில் நிறைவேற்றம்

posted in: உலகம் | 0

tbltopnews1_51248896122இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபரின் அதிகாரங்களை பறிக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா அந்நாட்டு பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மற்றும் பார்லிமென்டுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல் பிகர் அலி புட்டோ, 1973ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தார். ஆனால், இவருக்கு பின்னால் ஆட்சியை பறித்த சர்வாதிகாரிகள் ஜியா உல் ஹக் மற்றும் முஷாரப் ஆகியோர், பிரதமர் மற்றும் பார்லிமென்டுக்குரிய அதிகாரங்களை தங்கள் வசமாக்கி கொண்டனர்.

தற்போது பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. எனவே, அதிபரின் வசம் உள்ள அதிகாரங்களை பார்லிமென்டிடமும், பிரதமரிடமும் ஒப்படைக்கும் வகையில் அரசியலமைப்பில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு பார்லிமென்டின் கீழ் சபையில் நேற்று மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பார்லிமென்ட்டை கலைப்பது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பது போன்ற அதிகாரங்கள் இந்த சட்டத் திருத்தம் மூலம் அதிபரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி நியமனம், ராணுவ தளபதி நியமனம் போன்றவற்றில் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது, என்ற வகையில் இந்த சட்டத்திருத்தங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நபர் மூன்றாவது முறை பிரதமராக முடியாது, என்ற நடைமுறை இந்த சட்டதிருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளது. நேற்று கீழ் சபையில் 102 சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் 96 மசோதாக்களுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் பார்லிமென்ட் கீழ் சபையில் மொத்தம் 342 பேர் உள்ளனர். இந்த மசோதாகளுக்கு 292 எம்.பி.,க்கள் நேற்று ஆதரவு தெரிவித்தனர். மேல் சபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும், அதிபர் சர்தாரி இந்த மசோதாவை சட்டமாக்கும் வகையில் கையெழுத்திடுவார்.இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் கிலானி குறிப்பிடுகையில், ‘ இனி பார்லிமென்டின் இரு சபைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *