பிளஸ் 2 தேர்வில் கடினமான கேள்வியால் தேர்ச்சி சதவீதம் விழுமோ?

posted in: கல்வி | 0

tblfpnnews_99013483525பிளஸ் 2 பொதுத்தேர்வில் இந்தாண்டு கணித தேர்வில் அனைத்து கேள்விகளும் கடினமாக இருந்ததால், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் உத்தரவுப்படி, தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த உழைத்த ஆசிரியர்கள், தேர்ச்சி சதவீத வீழ்ச்சிக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை வரும் என்ற கவலையில் மூழ்கியுள்ளனர்.

மார்ச் முதல் தேதி துவங்கிய பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச் 22ல் நிறைவு பெற்றது. இந்தாண்டு கணித தேர்வில் அனைத்துக் கேள்விகளும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் புலம்பினர். அனைத்து கேள்விகளும் பாடப்புத்தகத்தில் இருந்துதான் கேட்கப்பட்டன என்றாலும், ஐந்தாண்டுகளாக கேட்கப்படாத புதிய கேள்விகளாக இருந்ததால் விடையளிக்க மாணவர்கள் திணறினர்.வேதியியல், இயற்பியல் தேர்வு வினாக்களிலும் சில குளறுபடிகள் காணப்பட்டன. இது கட்-ஆப் மதிப்பெண்ணில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், இப்பிரச்னை தேர்வு துறையின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, மார்ச் 23ல் துவங்கி, ஏப்., 20ல் நிறைவு பெற்றது. கணித தேர்வு பற்றி அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததால், விடைத்தாள் திருத்தும்போது, இதுபற்றி அரசு பரிசீலிக்கும் என ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.கணித பாட விடைத்தாளை திருத்த வழங்கப்பட்ட ‘கீ ஆன்சரில்’ இதுபற்றி எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. இதனால் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்குரிய சரியான விடை அளிப்பவர்களுக்கு வழக்கம் போல் மதிப்பெண் வழங்கப்பட்டன.

இதுகுறித்து விடைத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்ற ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘கணித தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் வழக்கத்தை விட புதிதாக இருந்ததால், பெரும்பாலான மாணவர்களால் விடையளிக்க முடியவில்லை. புத்தகத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டன என்றாலும், கேள்விகளை தொகுத்த விதம் தவறு.’விடைத்தாள் திருத்தும்போது எவ்வித சலுகையும் வழங்க அறிவுறுத்தவில்லை. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கணித தேர்வில் சுமார் 30 சதவீத மாணவர்கள் தோல்வியை சந்திப்பர். இத்தேர்வுக்கு மட்டும் சலுகை மதிப்பெண் வழங்குவதே இப்பிரச்னைக்கு தீர்வு. தவறினால் இந்தாண்டு பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைவது உறுதி.’பிற பாடங்களில் நன்கு படித்து தேர்வு எழுதியுள்ள நன்கு படிக்கும் மாணவர்கள் கூட, கணித தேர்வில் கிடைக்கும் குறைந்த மதிப்பெண்களால் பாதிக்கப்படுவர். ‘சென்டம்’ பெறுவோர் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல் இயற்பியல் பாடத்திலும் ‘சென்டம்’ குறைவாகவே இருக்கும். 12 மாணவர்களில் ஐந்து மாணவர்கள் வீதம் தோல்வி அடைய வாய்ப்புள்ளது. இது,தொழிற் கல்வி படிப்புகளுக்கு சீட் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும்,’ என்றனர்.

கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் குறைந்த சதவீத தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள், இந்தாண்டு தேர்ச்சியை உயர்த்திக் காண்பிக்க வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையும் வலியுறுத்தியிருந்தார். இதைப்பின்பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினர்.கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ‘அனைத்து ஆசிரியர்களும் காலை 8.30 மணிக்கே பள்ளிக்கு வர வேண்டும், தேவையில்லாமல் விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும்.காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்’ என வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளில், அப்பாடங்களை கையாண்ட ஆசிரியர்களை வரவழைத்து, பாடம் வாரியாக பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடுகளை செய்தார்.கடந்த முறை 60 சதவீதத்துக்கு குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியதோடு, இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவோம் என்ற உறுதி மொழியையும் எழுத்துப் பூர்வமாக பெற்றார்.இதே ரீதியில் பிற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினர்.விடைத்தாள் திருத்தும் போது கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகளில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைந்த மதிப்பெண்கள், அனைவரின் உழைப்பையும் வீணடிப்பதாக அமைந்து விடுமோ என ஆசிரியர்கள் கவலைப்பட துவங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *