பிளஸ் 2 தேர்வில் தவறான கேள்விகள் : 18 மதிப்பெண்கள் அளிக்க உத்தரவு

posted in: கல்வி | 0

tblfpnnews_18411982060சென்னை : பிளஸ் 2 வேதியியல், கணக்குப்பதிவியல் கேள்வித்தாள்களில் தவறான கேள்விகள் இடம் பெற்றதற்காக, அதற்குரிய 18 மதிப்பெண்களை அளிப்பதற்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 1ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், 22ம் தேதியுடன் முடிந்தது. 11ம் தேதி நடந்த வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வுகளில், தவறான கேள்விகள் சில கேட்கப்பட்டிருந்தன. வேதியியலில், ஒரு மதிப்பெண் பகுதியில் மூன்றாவது கேள்விக்கு (பி வகை கேள்வித்தாள்) சரியான விடை தரப்படவில்லை. கொடுக்கப்பட்ட நான்கு விடைகளுமே தவறானவை என்பதால், அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அதேபோல், 10 மதிப்பெண் பகுதியில், இரு உட்புற கேள்விகளாக பிரித்து தலா ஐந்து மதிப்பெண்கள் வீதம் கேள்வி கேட்கப்பட்டன. 70வது கேள்வியில், ‘ஏ’ வகை (பி வகை கேள்வித்தாள்) கேள்வி தவறாக கேட்கப்பட்டது. இதற்கு ஐந்து மதிப்பெண்கள் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதே தேதியில் நடந்த கணக்குப்பதிவியல் தேர்வில், அச்சுப்பிழை காரணமாக 49வது கேள்வி தவறாக இடம்பெற்றிருந்தது.

‘2006ம் ஆண்டில் வாங்கப்பட்ட இயந்திரம் 2009ல் விற்கப்பட்டது’ என இடம்பெற வேண்டிய கேள்வியில், ‘2009’க்கு பதிலாக 3009 என இடம்பெற்றது. இதனால், இந்த கேள்விக்கு சரியான விடையை எழுத முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர். இது, 12 மதிப்பெண் கேள்வியாகும். இந்த தவறான கேள்விகள் குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் ஏற்கனவே கூறும்போது, ‘விடைத்தாள் திருத்துவதற்கு முன், தவறான கேள்விகள் இடம்பெற்றது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, உரிய மதிப்பெண்கள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதன்படி, தவறான கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்கள் அளிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. முக்கியப் பாட விடைத்தாள்கள் திருத்தும் பணி, வரும் 3ம் தேதி (நாளை) துவங்குகிறது. பாட வாரியாக, ‘கீ-ஆன்சர்’ தயாரித்தபோது, தவறான கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள், ‘கீ-ஆன்சரில்’ உள்ளபடி, தவறான கேள்விகளுக்கு உரிய முழு மதிப்பெண்களை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் பயப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதன்மூலம், வேதியியலில் ஆறு மதிப்பெண்கள், கணக்குப்பதிவியல் தேர்வில் 12 மதிப்பெண்கள் என மாணவர்களுக்கு 18 மதிப்பெண்கள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *