பெரும்பான்மை ஆதரவுடன் மேலவை தீர்மானம் நிறைவேற்றம்; பா.ம.க., வும் ஆதரித்த அதிசயம்

posted in: அரசியல் | 0

tbltopnews1_72026789189சென்னை: 25 ஆண்டுகளாக இல்லாமல் இருந்த மேல்சபை அமைக்கும் தீர்மானம் இன்றைய சட்டசபையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் கடந்த 1986 ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர்., காலத்தில் மேல்சபை கலைக்கப்பட்டது.

நீண்ட காலமாக இந்த திட்டம் கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை நடந்த சட்டசபை கூட்டத்தில் அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., பேசுகையில் மேலவை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்ற முதல்வர் கருணாநிதி தீர்மானத்திற்கு ஓ.கே., கொடுத்தார். இதன்படி இந்த சபை அமைப்பது தொடர்பான தீர்மானம் இன்று ( திங்கட்கிழமை ) சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

இ. கம்யூ., வெளிநடப்பு : முதல்வர் கருணாநிதி முன்மொழிந்தார். இ.கம்யூ., கட்சியினர் ஆரம்பத்திலேயே இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாக சிவபுண்ணியம் எம்.எல்.ஏ., மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, இது குறித்து விவாதம் நடத்தி ஒட்டெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து தீர்மானத்தை ஆதரித்து பா.ம.க., விடுதலை சிறுத்தை கட்சியினர் பேசினர். தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

எம். எல்.ஏ.,க்கள் ஓட்டு : தி.மு.க., வில் சபாநாயகர் உள்பட 100 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 36 எம்.எல்.,க்கள் , விடுதலை சிறுத்தை -2 , ஆக மொத்தம் 138 ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் ஆதரித்து ஓட்டளித்ததால் இன்றைய ஒட்டெடுப்பில் இந்த மசோதா பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 155 ஒட்டுக்கள் ஆதரவாகவும், 61 ஓட்டுக்கள் எதிராகவும் விழுந்தன. தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க., மார்க்., கம்யூ., மற்றும் ம.தி.மு.க.,வினர் எம்.எல்,ஏ.,க்கள் , எதிர்த்து ஓட்டளித்தனர். ஆனால் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்ததால் 155 ஓட்டுக்கள் கிடைத்தன.

ஜெயலலிதா வரவில்லை: இதில் இன்று நடந்த ஓட்டெடுப்பில் ஜெயலலிதா மற்றும் இவரது கட்சி எம்.எல்.ஏ., சந்திரா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பங்கேற்கவில்லை. தி.மு.க., பொதுக்குழுவில் பங்கேற்ற அ.தி.மு.க., எம். எல்ஏ,.,க்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கவில்லை. நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலவை உருவாக்கப்பட்டதும் புதிய சட்டசபை வளாகத்திலேயே செயல்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

பலன் கிடைக்க வேண்டும் என்கிறது பா.ம.க., : பா.ம.க., தரப்பில் பேசிய ஜி.கே., மணி பேசுகையில் இந்த தீர்மானம் கொண்டு வருவதன்மூலம் தமிழ்நாட்டுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பது பா.ம.க., வின் விருப்பம். எனவே இதனை நிறைவேற்ற நாங்கள் துணையாக இருக்கிறோம் என்றார். இந்திய கம்யூ., கட்சியை சேர்ந்த சிவபுண்ணியம் எம்.எல்.ஏ., சபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசுகையில் ; இந்த மேலவை அமைப்பதன் மூலம் கூடுதல் செலவாகும். இது தேவையற்றது என்றார்.

பா.ம.க., கூட்டணியில் இருக்கிறது ? : தேர்தல் நேரத்தில் யார் மீது சவாரி செய்வது என தீர்மானிக்கும் பா.ம.க., தற்‌போ்து எந்த கூட்டணியில் இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. தி.மு.க., விடம் இருந்து பிரிந்து இருந்த பா.ம.க., இன்றைய மசோதாவிற்கு ஆளும்கட்சிக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளது. எனவே தி.மு.க.,வுடன் மீண்டும் இணைந்து கொள்ளுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *