மதுரை:இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலூரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல வழக்கு:இந்திய கிரிக்கெட் வாரியம் பல வித கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறது. அதற்கென தனி அணிகளை (லீக் டீம்) உருவாக்கியுள்ளது.
2007ல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியது.பொது நலன் மற்றும் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்கும் நோக்கத்தில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது அதன்படி வாரிய நிர்வாகம் செயல்படவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகள், நிர்வாகத்தை மத்திய அரசின் விளையாட்டு துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்பார்வையிட வேண்டும்.
வாரியத்திடம் ஏராளமான பணம் உள்ளது. கிரிக்கெட் போட்டிகள்நடக்கும் ஸ்டேடியங்கள் அடிப்படை வசதிகள் காணாத நிலையில் உள்ளன. கிரிக்கெட் போட்டிகளை பணம் சம்பாதிக்க வாரியம் பயன்படுத்தி வருகிறது.இதுகுறித்து ஏற்கனவே மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் அதிருப்தி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வாரியத்தை மத்திய அரசு விளையாட்டுத் துறை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
எந்த நோக்கத்திற்காக வாரியம் உருவாக்கப்பட்டதோ, அதை ஈடு செய்ய வேண்டும். வாரியத்தில் நடந்த வரவு செலவு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மனு மீதான விசாரணை முடியும் வரை இந்திய கிரிக்கெட் அணியின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. இம்மனு ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Leave a Reply