புதுடில்லி: இந்தியா, தங்கம் பயன்பாட்டில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. நம் நாட்டில், நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 6 மடங்கு (4.80 டன்) அதிகரித்து 27.70 டன்னாக உயர்ந்துள்ளது.
இது குறித்து மும்பை தங்கம், வெள்ளி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் ஹப்ண்டியா கூறும்போது, சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி உள்ளனர் என்று தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளதால், தனிநபர் செலவிடும் வருவாய் அதிகரித்து, தங்கம் விற்பனை உயர்ந்து வருகிறது. மேலும், இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு குறைந்து வருகிறது. இது, தங்கம் இறக்குமதியாளர்களுக்கு சாதகமான அம்சமாகும். இதுபோன்ற காரணங்களால், தங்கம் இறக்குமதியில், மார்ச் மாதத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதி, முந்தைய 2008ம் ஆண்டில் 420 டன்னாக இருந்தது. இது, சென்ற 2009ம் ஆண்டில் 19 சதவீதம் குறைந்து 339.80 டன்னாக சரிவடைந்தது. சென்ற 2009ம் ஆண்டில், தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து இருந்தது. உலக அளவில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியால், பொதுமக்கள் தங்கம் வாங்குவது குறைந்து போயிருந்தது. இதனால், சென்ற 2009ம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவடைந்தது.
Leave a Reply