சென்னை : நடப்பு நிதியாண்டிற்காக, மின்வாரியத்திற்கு 1,652 கோடியே 43 லட்ச ரூபாயை தமிழக அரசு மானியமாக வழங்க வேண்டும் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
தமிழக அரசு மானியத்தை கட்டத் தவறுமானால், இலவச மின்சாரம், கட்டண சலுகை உள்ளிட்டவை ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட, கட்டண வீதத்தை விடக் குறைவான வீதத்தை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்யுமானால், 2003ம் ஆண்டு மின்சார சட்டப் பிரிவு 65ன்படி, தமிழக அரசு மின்சார வாரியத்திற்கு மானியம் வழங்க வேண்டும். இதன்படி, 2010-11ம் நிதியாண்டிற்காக, மின்வாரியத்திற்கு 1,652 கோடியே 43 லட்ச ரூபாயை தமிழக அரசு மானியமாக வழங்கப்பட வேண்டும் என ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த மானியத்தை முன்னதாக அரசு வழங்க வேண்டுமென ஆணையம் வலியுறுத்துகிறது. அவ்வாறு வழங்கத் தவறுமானால், மாநில ஆணையத்தினால் நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணம் பொருந்தக்கூடியதாகும். மானியத் தொகை கணக்கிடுதல் தற்போது உள்ள மின் கட்டண வீதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியம் உயரும்? தற்போது மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி கேட்டு ஆணையத்திடம் மனு தாக்கல் செய்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. எனவே, மின்கட்டண விகிதம் மீண்டும் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசு வழங்க வேண்டிய மானியம் மேலும் உயர வாய்ப்புள்ளது. தமிழக அரசு மானியத்தை வழங்கத் தவறுமானால், இலவச மின்சாரம், கட்டண சலுகை உள்ளிட்டவை ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Leave a Reply