கடலூர் : ‘மின்வெட்டு செய்து வரும் தி.மு.க., அரசின், ‘பவரை’ நீங்கள் பறிக்க வேண்டும்’ என, ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.
தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டைக் கண்டித்து நெய்வேலியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதாவது:இங்கு திரண்டுள்ள மக்கள் கூட்டத்தால் எனக்கு புது உற்சாகம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்துவிட்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியாக இருக்குமா என கேள்வி எழுப்பினர்.அதற்கு நான், கருணாநிதி என்ற தீய சக்தியை அகற்ற அ.தி.மு.க.,வை துவங்கிய எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைத்து விட்டு, அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியாக இருக்கும் எனக் கூறினேன்.கடந்த 2006ம் ஆண்டு எனது ஆட்சியில் மின் மிகுதி மாநிலமாக இருந்த தமிழகம், தற்போது மின் பற்றாக்குறை காரணமாக இருளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்து வருகிறது.
மத்தியக் குழுமத்திலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கீட்டு மின்சாரம் வழங்கப்படவில்லை. எரிவாயு ஒதுக்கீட்டையும் மத்திய அரசு குறைத்துள்ளது. பதவி சுகத்திற்காக இதை தட்டிக் கேட்க இந்த அரசு தயங்குகிறது. இதை நான் சுட்டிக் காட்டினால், கடந்த (எனது) ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை என, கருணாநிதி அறிக்கை விடுகிறார்.ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மை காரணமாக வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் கடந்த 2005-06ம் ஆண்டை காட்டிலும் தற்போது 1,164 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரம் 11 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.
இதிலும் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது.அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஆண்டிற்கு 200 கோடி ரூபாயும், நிலக்கரியை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வகையில் ஆண்டிற்கு 45 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது.அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கிருந்து மட்டும் இறக்குமதி செய்வதற்கு ஏதோ பின்னணி உள்ளது.சரியான பராமரிப்பின்மை, ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மை, திட்டமிட்ட ஊழல் காரணமாக மின் வாரியத்திற்கு ஆண்டிற்கு 2,522 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் ஆறு மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், அனைத்து தொழில்களும் பாதிக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இரவில் மக்கள் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை.
இதைக் கேட்டால், மக்கள் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பழகன் கூறுகிறார். ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அன்னிய நாட்டு கம்பெனிகளுக்கு சீரான மின்சாரம் வழங்குவதற்காக மண்ணின் மைந்தர்கள் இருளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர்.’பவர்’ கட் செய்து வரும் தி.மு.க., ஆட்சியின் பவரை நீங்கள் பறிக்க வேண்டும். வரும் 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
Leave a Reply