மின்வெட்டை கண்டித்து நெய்வேலியில் 18 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

posted in: அரசியல் | 0

aiadmk_logoமின்வெட்டை கண்டித்து வரும் 18 ஆம் தேதி நெய்வேலியில் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.


இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மின் உற்பத்தியில் தமிழக அரசு கவனம் செலுத்தாததன் விளைவாக, கடந்த 4 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. மின்சார பற்றாக்குறையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2006&ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தின் மின்உற்பத்தி நிறுவு திறன் 10 ஆயிரத்து 11 மெகாவாட் ஆக இருந்தது. கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் மின் உற்பத்தி நிறுவு திறன் குறைந்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனல் மின் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாததன் காரணமாக அடிக்கடி பழுதடைவது, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்து இருப்பது, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய எரிவாயு ஒதுக்கீடு குறைக்கப்பட்டது ஆகியவைகளும் தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்வெட்டுக்கு முக்கிய காரணங்களாகும்.

மின் வெட்டால் விவசாய உற்பத்தி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மின்பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ள தமிழக அரசை கண்டித்தும், மின் பற்றாக்குறையை சீர்செய்ய வலியுறுத்தியும் அதிமுக சார்பில் வரும் 18&ம் தேதி நெய்வேலி பஸ் நிலையம் அருகே எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *