சென்னை:”இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதால், 23 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, காலம் காலமாக இருந்த வழக்கப்படி, மீண்டும் மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்,” என பா.ம.க., உறுப்பினர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.
பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில், பா.ம.க., உறுப்பினர் ஜி.கே.மணி பேசியதாவது: ஏழை, எளிய மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால், தற்போது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு ஓடுகின்றனர். சாதாரண கூலி தொழிலாளி கூட, தனது குழந்தையை தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். கல்வி, வணிகப் பொருளாக மாறிவிட்டது. ஏழை, எளியவர்களுக்கு தரமான கல்வி, எட்டாக்கனியாக உள்ளது.
வரும் கல்வியாண்டில் இருந்து சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரத்தில், இத்திட்டத்தை முழுமையான அளவில் கொண்டு வர வேண்டும். ஒரே பாடத் திட்டத்தை மட்டும் கொண்டு வந்து விட்டால், சமச்சீர் கல்வி திட்டம் முழுமை பெற்று விடாது. ஒரே பாடத் திட்டம், ஒரே தேர்வு முறை, ஒரே கற்பிக்கும் முறை, ஒரே பயிற்றுமொழி ஆகியவை வர வேண்டும். அப்போது தான், திட்டத்தின் நோக்கம் நிறைவு பெறும்.
பயிற்று மொழி விவகாரத்தை, பள்ளிகளின் முடிவுக்கு விட்டுவிடக் கூடாது. மாநிலம் முழுவதும் 53 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் இருக்கின்றன. இவற்றை, எல்.கே.ஜி., – யு.கே.ஜி., பள்ளிகளாக மாற்ற முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் பள்ளிகளை முறையாக துவக்க வேண்டும். மாணவர்களுக்கு யோகா, தியானம் கற்றுத் தர வேண்டும். விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும்.மேலை நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் அருகாமைப் பள்ளி முறையையும், பொதுப்பள்ளி முறையையும் இங்கு கொண்டு வர வேண்டும். தனியார் பள்ளிகளில் தகுதியற்ற ஆசிரியர்களை நியமித்து, குறைவான சம்பளம் வழங்குகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள், காலம் காலமாக மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். ஆனால், கோர்ட்டை காரணம் காட்டி, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்கிறீர்கள். இதனால், 23 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நியமன முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டம் நடத்துகின்றனர்.எதற்கெடுத்தாலும், கோர்ட்டை காரணம் காட்டாமல், அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்து, மீண்டும் மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், கிராமப்புற மாணவர்கள் உயர் படிப்புகள் பயில, தனி இட ஒதுக்கீட்டை முதல்வர் கொண்டு வந்தார். அது, 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றனர். இந்த ஒதுக்கீடு நிறுத்தப்பட்டு விட்டது. உயர் கல்வியில் மீண்டும் கிராமப்புற மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநிலம் முழுவதும், 9,100 பள்ளிகள், ஒரு ஆசிரியர் பள்ளிகளாக இயங்கி வருகின்றன. 7,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, 2,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. மீதமுள்ள 5,000 பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில் சில குளறுபடிகள் நடக்கின்றன.
கடந்த 2001ம் ஆண்டு பதிவு செய்த மாற்றுத் திறனாளிக்கு, தேர்வு வாரியத்தில் இருந்து அழைப்புக் கடிதம் வரவில்லை. ஆனால், 2007ல் பதிவு செய்தவருக்கு வந்தள்ளது. பதிவு மூப்பு விவகாரத்தில் முறைகேடு நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் அமைச்சர் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் புத்தகத்தில், ‘தமிழ் செம்மொழி’ என்ற தலைப்பில், ஒரு பாடம் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.
Leave a Reply