வாஷிங்டன், ஏப். 12: மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டனை கிடைக்கச் செய்யுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானியிடம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தினார்.
அவ்வாறு தண்டனை கிடைக்கச் செய்வது இந்திய- பாகிஸ்தான் இடையே உறவு மேம்பட சாதகமாக அமையும் என்பதையும் ஒபாமா சுட்டிக்காட்டியதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் அந்நாட்டு அதிபர் ஒபாமாவை ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். அப்போது மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை நிர்பந்திக்குமாறு ஒபாமாவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் கிலானி அதிபர் ஒபாமாவைச் சந்தித்தார்.
அப்போது மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிலானியிடம் ஒபாமா வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்த இந்தியத் தலைவர்கள் உண்மையாக உள்ளதாகவே நான் உணர்கிறேன். ஆனால் இரு நாடுகளிடையே உறவு மேம்பட வேண்டுமானால் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் என்று கிலானியிடம் ஒபாமா கூறியதாக தெரிய வருகிறது.
தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமுக உறவு ஏற்பட வேண்டும் என்பதையும் ஒபாமா சுட்டிக்காட்டினார். இரு நாடுகளிடையே சுமுக உறவு ஏற்படுவது இரு நாடுகளுக்கும் நன்மை அளிக்கக் கூடியது என்றும் அவர் கூறியதாக தெரிகிறது.
மேலும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கிலானியிடம் ஒபாமா பேசியதாகக் கூறப்படுகிறது.
அணுசக்தி ஒப்பந்தம் இல்லை: இந்தியாவைப் போல் பாகிஸ்தானும் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒபாமாவைச் சந்தித்தபோது அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கிலானி கோரிக்கை வைத்தார்.
பாகிஸ்தானின் எரிசக்தி தேவையை சமாளிக்க அணு மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது அவசியம் என்று கூறினார். ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா இதற்கு சாதகமான பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் ஒபாமா பாகிஸ்தானுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே நேரத்தில் பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கையில் சிக்கிவிடாமல் சிறப்பு பாதுகாப்பு அளிக்குமாறு கிலானியிடம் ஒபாமா கேட்டுக்கொண்டாராம். அணு ஆயுதங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ஒபாமாவிடம் கிலானி விளக்கியதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார் கிலானி. அப்போது மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஒபாமாவின் அறிவுறுத்தல் குறித்து நிருபர்கள் கேட்டனர். பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்க்கலாமா என்று கேள்விக்கு நாங்கள் எப்போதும் பயங்கரவாதத்தை எதிர்த்து வருகிறோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் இரண்டுவித கருத்துக்கு இடமில்லை என்றார் அவர்.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே உள்ள பிளேர் இல்லத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி.
Leave a Reply