மூன்றாவது தலைமுறையிலும் பட்டா கிடைக்காமல் தவிக்கும் 3000 குடும்பங்கள்

posted in: மற்றவை | 0

புதுக்கோட்டை, ஏப். 20: புதுக்கோட்டை, காமராஜர்புரத்தில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் ஏறத்தாழ 3 ஆயிரம் குடும்பங்கள் பட்டா கிடைக்காமல் தவித்து வருகின்றன.


1962-ல் புதுக்கோட்டை நகரின் கிழக்குப் பகுதியில் ஏறத்தாழ 150 ஏக்கரில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வீடற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் குடிசைகள் அமைத்துக் குடியேறினர். இந்தக் குடியிருப்புப் பகுதிக்கு காமராஜர்புரம் என்று பெயரும் சூட்டப்பட்டது.
அப்போது ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் புதுக்கோட்டை இருந்த நிலையில், இந்தப் பகுதிக்கு பட்டா அளிக்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சியில் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர். எனினும், பலனில்லை.
1974-ல் புதுக்கோட்டை தனி மாவட்டமானது. இந்நிலையில், காமராஜபுரம் பகுதியைச் சொந்தம் கொண்டாடி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். பல ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் இப்பகுதி மக்களுக்கு ஆதரவாக நீதிமன்றத் தீர்ப்பு வந்தது.
இதனால், இந்தப் பகுதி நத்தம் புறம்போக்காக வகை மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்டா வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 10.3.1976-ல் மாவட்ட நிர்வாகம் இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் பட்டா அளித்தது. 2002-ல் அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டைக்கு வந்த சட்டப்பேரவை மனுக்கள் குழுவிடம் காமராஜர்புரத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் பி. ராமையா, பட்டா பிரச்னை தொடர்பான கோரிக்கை மனு அளித்தார்.
அதற்கு, காமராஜர்புரம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 150 ஏக்கர் பரப்பில் ஒரு சென்டின் விலை ரூ. 38 ஆயிரம்; மொத்த மதிப்பு ரூ. 57 கோடி என்றும் மேலும் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியாக இருப்பதால் வட்டாட்சியர், சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பட்டா அளிக்க இயலாது, இப்பகுதிக்கு பட்டா அளிப்பது குறித்து அரசுக்கு முன்மொழிவு அனுப்பி சிறப்பு ஆணை பெற வேண்டும் என்றும் வருவாய்த் துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில், 2006-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அரசு புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகள் வசிக்கும் அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிபந்தனை நாளடைவில் 5 ஆண்டுகள் என்று மாற்றப்பட்டு, இப்போது 3 ஆண்டுகளாக தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், காமராஜர்புரம் பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை.
இதுபோல புதுக்கோட்டையின் புறநகர்ப் பகுதிகளான விவேகானந்தபுரம், எம். கல்யாணசுந்தரம் நகர், பிச்சத்தான்பட்டி ஆகிய பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் ஏறத்தாழ 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் பட்டா கிடைக்கவில்லை.
“”இந்தப் பிரச்னை தொடர்பாக பேரவையில் மூன்று முறை பேசினேன். ஆனால், அரசு இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை” என்றார் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர். நெடுஞ்செழியன்.
இந்தப் பிரச்னைக்காக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ராஜசேகரன் கூறியது:
“”திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த வருவாய்த் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் கவனத்துக்கு இந்த பிரச்னையைக் கொண்டுசென்றபோது, “அடுத்த இரண்டே மாதங்களில் காமராஜர்புரம் பகுதிக்கு பட்டா அளிக்கப்படும்’ என்று உறுதியளித்தார். 4 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒன்றும் நடக்கவில்லை” என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *