பல்லாவரம் : அரைகுறையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ள பல்லாவரம் ரயில்வே மேம்பாலத்தின் மீது வேகமாக சென்ற ஒரு கார், ரயில்வே தண்டவாளத்தின் மீது தலைகுப்புற விழுந்தது.
இந்த விபத்தின் போது, கார் விழுந்த ‘டிராக்’கில் மின்சார ரயில்கள் ஏதும் வராததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்திற்கு, பாலக் கட்டுமானம் முடியவில்லை என்ற அறிவிப்பு எதுவும் பாலத்தில் வைக்கப்படாதது தான் காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பல்லாவரம் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, கடந்த 2003ம் ஆண்டு, பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், பாதுகாப்புத் துறையிடம் இருந்து நிலம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தன. தற்போது, பாலத்தின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. ரயில்வே பகுதியில் மட்டும் பணிகள் நடக்க வேண்டும். தற்போதைய நிலையில், ரயில்வே பகுதியில் பாலங்கள் இணைக்கப்படாததால் பாலத்தின் இரு முனைகளுக்கும் இடையில் பெரும் இடைவெளி உள்ளது. இதையறியாமல் நேற்று காலை 11.05 மணிக்கு பல்லாவரம் ரயில்வே மேம்பாலத்தின் மீது வேகமாக சென்ற ஸ்கார்ப்பியோ கார் ஒன்று, பாலத்தின் 50 அடி உயரத்தில் இருந்து ரயில்வே லைனில் விழுந்து விபத்துக்குள்ளானது. சென்னை, சிந்தாதிரிபேட்டை, சிங்கண்ணா தெருவை சேர்ந்த நித்யானந்தம் மகன் திவாகர் (30). இவரது சகோதரர் தேவராஜ். இருவரும் அதே பகுதியில் கூரியர் சர்வீஸ் நடத்தி வருகின்றனர். திவாகரின் பாட்டி, தாம்பரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்த்துவிட்டு, பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் உறவினருக்கு ‘அட்மிஷன்’ விண்ணப்பம் பெறுவதற்காக, திவாகர் தனது நண்பரின் ஸ்கார்பியோ (டி.என்.05, டி;9418) காரில் வந்தார்.
திரிசூலத்தில் இருந்து பழைய ஜி.எஸ்.டி., சாலை வழியாக வந்த திவாகர், பல்லாவரம் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்படாமல் இருப்பது தெரியாமல், பாலத்தின் மீது வேகமாக காரை ஓட்டினார். பாலத்தின் உச்சிக்கு வந்தவுடன், பாலத்தின் முடிவில் அதல பாதாளமாக இருப்பதை பார்த்து திவாகர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பிரேக்கை அழுத்தினார். ஆனால், வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் மேல் 30 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து அப்பளமாக நொறுங்கியது.
பல்லாவரம் ரயில்வே மேம்பாலத்தின் மேல் இருந்து கார் விழுந்த இடத்திற்கும், ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும், உயர் அழுத்த மின்சாரம் பாயும் கம்பிகளுக்கும் இடையே எட்டு அடி இடைவெளி உள்ளது. திவாகர் பிரேக் மிதித்ததால், பாலத்தின் முனைக்கும், மின் கம்பிக்கும் இடையே தண்டவாளத்தின் மீது கார் விழுந்தது.
அந்த நேரத்தில் தாம்பரம் – பீச் வழித்தடத்தில் மின்சார ரயில் செல்லவில்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே வேளையில், திவாகர் காரோடு விழுந்த அடுத்த சில நொடிகளில் (பீச் – தாம்பரம்) இரண்டாவது தண்டவாளத்தில் மின்சார ரயில் சென்றது. ரயில் பாலத்தை கடந்த நேரத்தில் கார் விழுந்திருந்தால், அது ரயில் மீது விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.
பல்லாவரம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள், காரில் போராடிக் கொண்டிருந்த திவாகரை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜே.சி.பி., இயந்திரம் மூலம் விபத்தில் சிக்கிய கார், தண்டவாளங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின், மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக ஒன்றரை மணி நேரம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது எதிர்பார்த்த விபரீதம்! : பல்லாவரம் மேம்பாலம் வழியாக, புதிதாக வரும் வாகன ஓட்டிகள் பாலப் பணிகள் நிறைவடையாதது தெரியாமல் அதன் மீது வேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். பாலத்தின் உச்சியில் தான் அவர்களுக்கு அபாயம் தெரிகிறது. அதிர்ச்சியுடன் அவர்கள் கீழே திரும்பி விடுகின்றனர். கடந்த சில மாதங்களில் இவ்வாறு பல வாகனங்கள் பாலத்தின் மீது ஏறி, பின்னர் சுதாரித்துக் கொண்டு கீழே இறங்கியுள்ளன. தடுப்புக்கள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து நிகழும் என்று பொதுமக்கள் அச்சப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்நிலையில், விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த பல்லாவரம் போலீசார், நெடுஞ்சாலைத் துறையினரை எதிர்பார்க்காமல் அவர்களாகவே தடுப்புக்களை வைத்துள்ளனர். பால கட்டுமானப் பணிகளை இழுத்தடிக்கும் நெடுஞ்சாலைத் துறையினர் இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Leave a Reply