வக்கீல்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பிடிக்கும்: முதல்வர் கருணாநிதி உருக்கம்

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_95920962096சென்னை:”கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது ஒன்றும் பெரிதல்ல; அதுவும் வக்கீல்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எனக்கு பிடிக்கும்,” என முதல்வர் கருணாநிதி பேசினார்.

சென்னை ஐகோர்ட்டில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று காலை நடந்தது. இதை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

விழாவில் பங்கேற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது:ஜனநாயகத்தில் யாரும் எந்த நிலையும் மேற்கொள்ள முடியும். ஆனால், ஜனநாயகத்தில் அநாகரிகத்தை புகுத்தி, அதை வீழ்த்த நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கு தலை வணங்க முடியாது. நீதிபதிகளை உட்கார வைத்துக்கொண்டு இதற்கு மேல் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. கடந்த 70 ஆண்டு கால பொது வாழ்க் கையில் எதிர்ப்புகள், ஏளனங்கள், இழி மொழிகள், கல் வீச்சு சம்பவங்களை பார்த்துவிட்டேன். தாழ்த்தப்பட்ட, வீழ்த்தப் பட்ட, அடிமட்டத்தில் தள்ளப் பட்ட மக்களுக்காக எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் உழைப்பேன்.

என்னை பார்த்து மூன்றாம் தரம் என்று சொன்னால், அதற்கு போட்டியாக நீ தான் மூன்றாம் தரம் என்று சொல்கின்ற ஆள் நான் கிடையாது. எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், ஏச்சு, பேச்சுகள் வந்தாலும் வாழ்க வசவாளர்கள் என்று வாழ்த்தி விட்டு உன் வேலையை பார் என்று அண்ணா எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அந்த வேலையைத் தான் நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். சமூகத்தில் அனைவரும் நினைத்திருப்பது போல் வக்கீல்கள் அனைவரும் சுக போகத்தில் திளைக்கவில்லை. எதிர்பாராமல் இறக்கும் வக்கீல்களின் வாரிசுகள் வறுமையில் வாழ்வதையும் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தற்போது, வக்கீல்களின் சேம நல நிதி திட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும் 10 ரூபாய் கட்டணத்தை 30 ரூபாயாக உயர்த்த முடியும். அதன் மூலம் விபத்து இழப்பீட்டுத் தொகையை இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டுமென கேட்டுள்ளனர். ஐந்து லட்சம் அல்ல; அதற்கும் அதிகமாக தருவதற்கும் நான் தயாராக இருக்கிறேன். தற்போது, சட்டசபையில் நிதி நிலை அறிக்கை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே அந்த அறிவிப்பை வெளியிட்டால், சட்டசபையில் கேள்வி எழும்.ஆகவே, வெளியிட வேண்டிய நேரத்தில் அரசு சார்பாக அந்த அறிவிப்பை வெளியிடுவேன்.

வக்கீல்கள், மருத்துவ அறக்கட்டளை நிறுவுவதற்காக சென்னையில் 10 ஏக்கர் நிலத்தை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். இதுவும் நிறைவேற்ற முடியாத கோரிக்கை அல்ல; அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து ஆவன செய்யப்படும். கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது ஒன்றும் பெரிதல்ல. அதுவும் வக்கீல்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எனக்கு பிடிக்கும்.எனது பொது வாழ்க்கை ஆரம்பித்த காலத்தில் இருந்து போலீஸ் மற்றும் வக்கீல்களிடம் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. என்னை கைது செய்கின்ற வேலையை போலீஸ் செய்தால், அதற்காக வாதாடுகின்ற வேலையை வக்கீல்கள் செய்கின்றனர்.

கணைகளைத் தாங்கித் தான் நான் பழக்கப்பட்டு இருக்கிறேன். எனது இதயத்தை திறந்து பார்த்தால் நூற்றுக் கணக்கான காயங்கள் இருக்கும். அந்த காயங்கள் யாரால் ஏற்பட்டது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஏனென் றால் அதுவே பெரிய காயம். இங்கு பலரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு குரல் தமிழில் ஒலித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.நம்மையெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத் தில் ஆழ்த்தும் அந்த ஒலி, அடிக்கடி கேட்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டிலும் ஒலிக்க வேண்டும். அதற்கு முதல் படியாக, ஐகோர்ட்டில் தமிழ் ஒலிப்பதற்கு நீதிபதிகள் வழிவகுக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவில், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே, நீதிபதிகள் எலிபி தர்மாராவ், இப்ராகிம் கலிபுல்லா, சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜா, மாநில அமைச்சர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் பந்தலில் அமர்ந்து, விழா நிகழ்ச்சிகளை கவனித்தனர்.

மோதல்: ‘டிவி’ கேமரா மேன்களுக்கு அடி:சென்னை ஐகோர்ட்டில் நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் போது, சிறப்பு விருந்தினரான முதல்வர் கருணாநிதி பேச துவங்கும் போது, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வக்கீல்கள் ஆறு பேர், சுரேஷ் என்பவர் தலைமையில் கறுப்புக் கொடி காட்டியதுடன், முதல்வரை பேச அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பினர்.இதை கவனித்த ஆளுங்கட்சி வக்கீல்கள் சிலர் எழுந்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து கோஷம் எழுப்பியதுடன், இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றையும் வினியோகித்தனர்.

இதனால் கோபமடைந்த ஆளுங்கட்சி வக்கீல்கள், கோஷம் போட்டவர்கள் மீது சேர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதலை சமாளிக்க முடியாமல் அவர்கள் தப்பி ஓடினர். இதை படம் எடுத்த தமிழ் மற்றும் ஆங்கில செய்தி சேனல்களின் கேமராமேன்களுக்கும் அடி, உதை விழுந்தது.இதில், ஒரு கேமராமேனிடம் இருந்த கேமரா பறிக்கப்பட்டு உடைத்து நொறுக்கப்பட்டது. மோதலில் காயமடைந்த சுரேஷ், ஜிம்ராஜ் மில்டன், தியாகு, பார்த்தசாரதி, சாலமன், முனீஸ்வரன் உட்பட ஆறு வக்கீல்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வக்கீல்கள் தாக்குதல்களில் காயமடைந்த, ‘டிவி’ கேமராமேன்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும், முதல்வர் கருணாநிதி பேசும் போது கறுப்புக் கொடி காட்டியதாக சுரேஷ் உள்ளிட்ட ஆறு பேரும் நேற்று மாலை போலீசாரால் கைது செய்யப்பட்டு பின், ஜாமீனில் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் அம்பேத்கர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த எழிலரசு மற்றும் துரைராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தால், ஐகோர்ட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *