சென்னை:”வறட்சியை சமாளிக்க 10 மாவட்டங்களுக்கு, 18 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும்,” என்று துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில், துணை முதல்வர் ஸ்டாலின் படித்த அறிக்கை:தமிழகத்தில் கடந்த ஆண்டு இயல்பான மழை அளவான, 990.1 மி.மீ., மழைக்கு பதிலாக, சரமாரியாக இரண்டு சதவீதம் அதிகமாக, 1010.4 மி.மீ., மழை பெய்துள்ளது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு குறைவாக உள்ளது.
கடுமையான கோடை வெயில் காரணமாக, ஒரு சில மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கலெக்டர்கள் அரசுக்கு தெரிவித்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் விருதுநகர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை என ஆறு மாவட்டங்களுக்கு தலா இரண்டு கோடி ரூபாயும், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் என இரண்டு கோடி ரூபாயும், எட்டு மாவட்டங்களுக்கு மொத்தம் 14 கோடி ரூபாய் நிதியை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், தூர் வாரி கிணறுகளை ஆழப்படுத்துதல், பம்பு செட்டுகளை பழுது பார்த்தல் முதலிய பணிகள், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, ஏப்.12ல் தலா இரண்டு கோடி ரூபாய் வீதம், நான்கு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து பத்து மாவட்டங்களுக்கு, மொத்தம் 18 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
Leave a Reply