மதுரை:அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் வருகை பதிவை கண்காணிக்க, விரல் ரேகை பதிவு கருவி அமைப்பதற்கு, டாக்டர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வேலூர் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் இல்லாத மூன்று டாக்டர்க ள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ‘அரசு டாக்டர்களை கண்காணிக்க விரல் ரேகை பதிவு கருவிகள் அமைக்கப்படும்’ என அரசு அறிவித்தது.இந்நிலையில், மதுரை அரசு டாக்டர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
தீர்மானங்கள் குறித்து மாநில செயலர் செந்தில் கூறியதாவது:டாக்டர்களுக்கு தினமும் பணி நேரம் மாறி மாறி வரும். இதனால், விரல் ரேகை பதிவுத் திட்டம் என்பது தோல்வியில் தான் முடியும்; இதை புறக்கணிக்கிறோம். இதற்கு பதில், இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்திய ‘ஸ்மார்ட் கார்டை’ வழங்கலாம். இதன் மூலம் டாக்டர்கள் எங்குள்ளனர் என்பதை எளிதில் கண்டறிய முடியும். மே 20ல் சென்னையில் மாநில செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.டாக்டர்களுக்கு பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டு ஆறு மாதங்களாகின்றன.
பெரும்பாலானோருக்கு பதவி உயர்வு தரப்படவில்லை. இதற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும்.வேலூரில் ஆள் கடத்தல் மாதிரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாக்டர்களை சிலர் அழைத்துச் சென்றது கண்டிக்கத்தக்கது. இதுவரை அவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவது சமூக நலத்துறையின் பணி. ஆனால் டாக்டர்கள் தான் வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.
மேலும், இந்நிதியை பராமரிக்க, கணக்காளர் நியமிக்கும் வரை, மருத்துவம் சார்ந்த பணிகளை மட்டுமே டாக்டர்கள் செய்வர்.தாய், சேய் அவசர பராமரிப்பு நிலையத்தில் 10 டாக்டர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நான்கு டாக்டர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதால், 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. போதிய டாக்டர்களை நியமிக்கும் வரை, டாக்டர்கள் பொதுப்பணி மட்டும் தான் பார்ப்பர். மே 15 முதல் இது செயல்படுத்தப்படும். இவ்வாறு செந்தில் தெரிவித்தார்.
Leave a Reply