புதுடில்லி: ஓரியண்டல் பேங்க் ஆப் காமஸ் சுமார் 1600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அதுவும் நடப்பு நிதியாண்டிலேயே(2010-11) இந்த வேலைவாய்ப்பு வழங்கப் பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரபு கூறும்போது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வீட்டு வசதி, சில்லரை மற்றும் வேளாண் துறைகளுக்கு அதிக அளவில் கடன்கள் ஆகியவற்றை வங்கி வழங்கி வருகிறது. சென்ற நிதி ஆண்டில், இவ்வங்கி டெபாசிட்டுகளின் மூலம் ரூ.1,20,267 கோடியை திரட்டி உள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டில் திரட்டப்பட்ட ரூ.98,378 கோடியை விட 22.24 சதவீதம் அதிகமாகும் என்று தெரிவித்தார். மேலும், வங்கியில் நடப்பு நிதியாண்டில் 1600 பேரை பணியில் அமர்த்த இருப்பதாகவும், இதில், 373 பேர் சிறப்பு அதிகாரிகளாக பணியமர்த்தப் பட உள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
இதே நிதி ஆண்டுகளில், இவ்வங்கி வழங்கிய கடன்கள் 22.74 சதவீதம் அதிகரித்து, அதாவது ரூ.68,845 கோடியிலிருந்து ரூ.84,506 கோடியாக உயர்ந்துள்ளது. ஆக, சென்ற நிதி ஆண்டில், இவ்வங்கியின் மொத்த வணிகம் 22.45 சதவீதம் அதிகரித்து ரூ.1,67,223 கோடியிலிருந்து ரூ.2,04,773 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. நாடு முழுவதுமாக 1,510 கிளைகளை கொண்டுள்ள இந்நிறுவனம், சென்ற நிதி ஆண்டில் 1,290 பேரை பணிக்கு சேர்த்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply