நாமக்கல் : ” பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்தினால் நாடு முழுவதும் லாரிகள் இயக்க அனுமதி வழங்கப்படும் என, மத்திய அரசு உறுதியளித்துள்ளதால், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) சார்பில், வரும் 5ம் தேதி முதல் நடக்க இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
‘இந்தியா முழுவதும் லாரிகள் இயக்க 15 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், தேசிய பெர்மிட் வழங்கப்படும்’ என, கடந்த ஆண்டு மத்திய அரசு உறுதியளித்திருந்தது. எனினும், அக்கோரிக்கை நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது. அது, லாரி உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.’பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்தினால் நாடு முழுவதும் லாரி இயக்க அனுமதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். சுங்கச்சாவடி மையங்களில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க வேண்டும். டயர் மீதான வரியை குறைக்க வேண்டும். டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மார்ச் மாதம் 30ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும்.இல்லையெனில், ஏப்ரல் 5ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாரி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்’ என, லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.
ஸ்டிரைக் தொடர்பான பேச்சுவார்த்தை மத்திய அமைச்சர் கமல்நாத் முன்னிலையில் டில்லியில் கடந்த இரு தினங்களாக நடந்தது.நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் இந்த சங்கத் தலைவர் சண்முகப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில், ‘மே மாதம் 1ம் தேதி முதல் 15 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், நாடு முழுவதும் லாரி இயக்க அனுமதிக்கப்படும்’ என, எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.அதுபோல், நாடு முழுவதும் சுங்கச்சாவடி மையங்களில் சுங்கவரி ஒரே மாதிரியாக வசூல் செய்வது சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடப்படும். டயர் மீதான வரி குறைப்பு 45 நாட்களுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. லாரிகள் சங்க நிர்வாகிகள் இதை ஏற்றுக் கொண்டதையடுத்து, வரும் 5ம் தேதி முதல் நடக்க இருந்த லாரி வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் ஸ்டிரைக் உண்டு : தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி கூறியதாவது:எட்டாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படும். 304(ஏ) வழக்கில் டிரைவர் லைசென்ஸ் ரத்து, உரிமையாளர் பெர்மிட் ரத்து போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். நெடுஞ்சாலை வழிப்பறி சம்பவம் தொடர்பாக எந்த போலீசில் புகார் செய்தாலும், அதை ஏற்க வேண்டும். மெக்கானிக்கல் வரி என்ற பெயரில் ஒவ்வொரு வாகனத்திற்கும் 1,500 ரூபாய் வீதம் வசூலிப்பதையும் கைவிட வேண்டும். ஓசூர், கும்மிடிப்பூண்டி செக்-போஸ்ட்களில் குண்டர்களை வைத்து பணம் வசூலிக்கப்படுகிறது. அதை தடை செய்ய வேண்டும்.இந்த ஐந்து அம்ச கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி, திட்டமிட்டபடி வரும் 5ம் தேதி முதல் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கும். மூன்று மாநிலங்களையும் சேர்த்து ஐந்து லட்சம் லாரிகள் ஈடுபடும். இவ்வாறு நல்ல தம்பி கூறினார்.
Leave a Reply