மும்பை : பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு அளிக்க, வங்கி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம், எட்டு லட்சம் வங்கி ஊழியர்கள் பலனடைவர்.
மும்பையில் நேற்று, வங்கி நிர்வாகங்களுக்கும், வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் வங்கி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதியிலிருந்து 17.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க முடிவு ஏற்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் 26 பொதுத் துறை வங்கிகளின் ஊழியர்களும், 12 தனியார் வங்கிகளின் ஊழியர்களும், எட்டு வெளிநாட்டு வங்கிகளின் ஊழியர்களும் பலனடைவர். கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கொண்டு உயர்த்தப்பட்ட புதிய சம்பளத்தின் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட வேண்டியுள்ளதால், வங்கிகளுக்கு 4 ஆயிரத்து 816 கோடி ரூபாய் செலவாகும். கடந்த 1995ம் ஆண்டு பென்ஷன் திட்டத்தில் சேராதவர்களும், தற்போது பென்ஷன் திட்டத்தில் சேருவதற்கு நேற்றைய ஒப்பந்தப்படி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பென்ஷன் திட்டத்தின்படி 60 ஆயிரம் பென்ஷன்தாரர்களும், இரண்டு லட்சத்து 70 ஆயிரம் வங்கி ஊழியர்களும் பலனடைவர் என, இந்திய வங்கிகள் சங்கத்தின் துணை நிர்வாக தலைவர் உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply