புதுடில்லி : கோல்கட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தாக்கிய வழக்கில் கைதான அன்சாரியின் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இதுகுறித்து 16 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002, ஜனவரி 22ம் தேதி, கோல்கட்டாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு இரண்டு மோட்டார் பைக்குகளில் வந்த மர்ம மனிதர்கள், அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள் மீது ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் ஆறு பேர் பலியாயினர்; 14 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் நடந்த நான்கு நாட்களில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரிபாக் என்ற இடத்தில் நடந்த என்கவுன்டரில் காயமடைந்த சலீம் மற்றும் ஜாகித் இருவர் மூலம், தூதரக தாக்குதல் சம்பவத்தில் அப்தாப் அகமது அன்சாரி என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரிந்தது. அன்சாரி, “ஆசிப் ரஜா கமாண்டோ போர்ஸ்’ என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். சம்பவத்துக்குப் பின் இவர் துபாய்க்குத் தப்பிச் சென்றார். துபாயில் கைது செய்யப்பட்ட இவர், 2002, பிப்ரவரி 9ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த வழக்கில், 2005 ஏப்ரலில் அன்சாரிக்கும் அவரது உதவியாளர் ஜமீலுதீன் நசீர் என்பவருக்கும், விசாரணைக் கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. கோல்கட்டா ஐகோர்ட், 2010, பிப்ரவரியில் இருவர் மீதான தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மற்ற மூன்று பேருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அன்சாரி, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து வழக்கின் அடிப்படையில், டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் சி.கே.பிரசாத் இருவரும், அன்சாரியின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், அன்சாரியின் மனு மீதான பதிலை, இன்னும் 16 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Leave a Reply