மதுரை:அரசு பணி கிடைத்த பின்பும், வேலை வாய்ப்பு பதிவை ரத்து செய்யாததால், காத்திருப்போர் பலருடைய வாய்ப்பு பறிபோகிறது.
இன்றைய நிலையில் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக, எத்தனையோ லட்சம் பேர் காத்திருக்கின்றனர். இதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்து கிடக்கின்றனர்.கடந்த 2006க்கு பின், பல துறைகளிலும் நியமனம் விரைவாக நடந்து வருகிறது.
கல்வி, போலீஸ், மருத்துவம் உட்பட மற்ற துறைகளிலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மூலமோ, போட்டி தேர்வுகள் மூலமாகவோ பணிநியமனங்கள் நடந்து வருகின்றன.இதனால், வேலை வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளோர், ஓரிரு ஆண்டுகளில் நமக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில், வேலை வாய்ப்பு கிடைத்த பலரின் பதிவு மூப்பு ரத்து செய்யப்படாததால், காத்திருப்போர் பலரின் வாய்ப்புகள் பறிபோகிறது. இதனால், காத்திருப்போர் கவலையடைகின்றனர்.
போட்டித் தேர்வு, நேரடி நியமனமென, எந்த வழியில் வாய்ப்பு பெற்றாலும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு என்பது கட்டாயம். ஒருவருக்கு அரசு பணி கிடைத்ததும், அவரது பதிவு ரத்து செய்யப்பட வேண்டும். சிறுபான்மை கல்வி நிறுவனங்களில், பணிவாய்ப்பு கிடைப்போருக்கு மட்டுமே, பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்ற விதி உள்ளது.
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளியில் பணிவாய்ப்பு கிடைத்தவர், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் வாய்ப்பு கிடைத்தவர் மற்றும் வேறு துறைகளில் ஊழியர்களாக நியமனம் பெற்றோரின் பதிவு கூட, இன்னும் ரத்தாகாமல் உள்ளது. பணிநியமனம் பெற்றவர்களும், பதிவை ரத்து செய்ய முயற்சிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு பின்னுள்ள பதிவுதாரரின் வாய்ப்பு பறிபோகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன் வாய்ப்பு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கூட, தற்போது நடந்து வரும் ஆசிரியர் பணிநியமன சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு அழைப்பு கடிதம் வந்துள்ளது, மற்ற ஆசிரியர்களை வேதனைபட வைத்துள்ளது. இதுபோல, பணியிலுள்ள ஆசிரியர்கள் புதிய நியமனத்தை எப்படியும் ஏற்க போவதில்லை. அவர்கள் விரும்பாத நிலையில், பதிவுமூப்பு வரிசையில் தொடருவோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தை கேட்டால், பணி நியமனம் பெற்றோர் பட்டியல், தங்களுக்கு முறைப்படி வருவதில்லை என்ற குற்றச்சாட்டுதான் பதிலாக கிடைக்கிறது. பணிநியமனம் பெற்றவர் பல ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு கடிதம் அனுப்பினால் அதே எண்ணிக்கையில் காத்திருப்போர் பாதிக்கவே செய்வர். பணிநியமனம் தொடர்பாக, பணியாற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம்.
Leave a Reply