கோவை : “”அரசு வழிகாட்டுதல்படி அண்ணா பல்கலைக்கழகம், கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திற்கு விரைவில் மாற்றப்படும்.
அதற்கான பணிகள் துவங்கிவிட்டன,” என்று அண்ணா பல்கலைக் கழக புதிய துணைவேந்தர் கருணாகரன் கூறினார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொதுவியல் பிரிவில் பொறியியல் துறைத்தலைவராக இருந்த கருணாகரன், கோவை அண்ணா பல்கலை துணைவேந்தராக அரசு நியமித்தது.நேற்று முன்தினம் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொறுப்பேற்ற துணைவேந்தர் கருணாகரன் கூறியதாவது: கோவை அண்ணா பல்கலையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். படிப்புகள் அனைத்தும் சர்வதேச தரத்திற்கு மாற்றம் செய்யப்படும். நவீன வசதிகளைக் கொண்ட அரங்குகள் உருவாக்கப்படுவதோடு, விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும். மாணவ, மாணவியருக்கு சிறந்த விடுதி, ஆராய்ச்சியாளர்களுக்கு தனி விடுதி, வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கென சர்வதேச தரத்தில் விடுதி அமைக்கப்படும்.
பல்கலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கென புதிய குடியிருப்புகள், பணியாளர் மற்றும் மாணவர் நலன் கருதி 24 மணி நேர மருத்துவ வசதி ஏற்படுத்தப்படும். பட்டமளிப்பு விழா, தேசிய கருத்தரங்கு, முக்கிய விழாக்கள் நடத்த புதியதாக கலையரங்கமும், சிறிய கருத்தரங்ககூடமும் கட்டப்படும். கோவை அண்ணா பல்கலையின் கீழ் கோவை, சேலம், பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில், அரசு உதவி பெரும் கல்லூரிகள், 161 சுயநிதிக்கல்லூரிகள் உள்ளன. இதில், தரமான கல்வி வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு பொறியியல்கல்லூரியை, அரசு வழிகாட்டுதலின் படி கோவை அண்ணா பல்கலையாக மாற்றம் செய்யப்படும். அதற்கான அடிப்படை பணிகள் இன்று(நேற்று) முதலே துவங்கிவிட்டன. தவறும் பட்சத்தில், பாரதியார் பல்கலை வளாகத்தில் 300 ஏக்கர் நிலத்தை அண்ணா பல்கலைக்கு வழங்க அரசு உத்தேசித்துள்ளது. அந்நிலத்தை பெற்று அங்கு நிர்வாக, தேர்வுத்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு கருணாகரன் கூறினார்.
Leave a Reply