இடிந்து விழுந்தது காளஹஸ்தி கோவில் கோபுரம்: பக்தர்கள் அதிர்ச்சி

posted in: மற்றவை | 0

large_7043சென்னை: பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில். திருப்பதிக்கு அருகில் உள்ள இக்கோவிலில் ராகு, கேது தோஷத்திற்கு பரிகார பூஜைகள் நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். காளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரம் 140 அடி உயரம் கொண்டது. இதன் இடப்புறத்தில் முதல் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரை, திடீரென பெரிய விரிசல் ஏற்பட்டது., கோபுரம் பிளவுபட்டது போல் காணப்பட்டது. மின்னல் வெட்டியது போல காணப்படும் இந்த பகுதியிலிருந்து சுண்ணாம்பு துகள்கள் விழுந்தன.

சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, இக்கோபுரத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தது. கோவில் ராஜகோபுரத்திலிருந்து 200 அடி வரை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை உடனே காலி செய்யும்படியும் இக்குழு ஆலோசனை வழங்கியது. இந்நிகழ்வு, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலை ஏழு மணி அளவில் இந்த கோபுரம் இடிந்து விழுந்தது. கோபுரத்தின் அருகில் யாரும் செல்ல முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. பயங்கர சப்தத்துடன் கோபுரம் இடிந்து விழுந்தது. காளஹஸ்தி முழுவதும் அந்த சப்தம் எதிரொலித்தது. கோயிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காளஹஸ்தியை சேர்ந்த பொதுமக்கள் உடனே கூட்டம், கூட்டமாக அங்கு விரைந்தனர்.

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி கூறியதாவது: காளஹஸ்தி ராஜகோபுரத்தை கி.பி.1510ம் ஆண்டு, கிருஷ்ண தேவராயர் கட்டினார். கோபுரத்தின் மூலப்பொருளான சுண்ணாம்பில் ஏற்படும் ஒட்டும் தன்மை குறைவு, இடி தாக்குதல், கோபுரத்தின் அடித்தளத்தில் நிகழும் மண் அரிப்பு போன்ற காரணங்களால் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு நாகசாமி கூறினார்.

ரோசய்யா அவசர ஆலோசனை: காளஹஸ்தி கோவிலின் தெற்கு ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா, அறநிலையத் துறை அமைச்சர் வெங்கடரெட்டி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் நேற்று இரவு ஐதராபாத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். “ராஜகோபுரம் இடிந்து விழுந்ததில், அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியம் ஏதும் இல்லை’ என, அமைச்சர் வெங்கட ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார். காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்தவுடன் சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி, அங்கு சென்று இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்பார்வையிட்டார். போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு மீட்பு நடவடிக்கை மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோபுரத்தின் இடிபாடுகளில் எவரும் சிக்கிக் கொண்டதாக இதுவரை தெரியவில்லை என, கலெக்டர் தெரிவித்தார். காளஹஸ்தி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இடிந்து விழுந்த ராஜகோபுரத்தை பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *