இந்தியாவில் பெங்களூரு ‘பெஸ்ட்’ : சென்னைக்கு 153வது இடம்

2096173புதுடில்லி : உலகளவில் வாழ்வதற்குத் தகுதியான இந்திய நகரங்களில் பெங்களூரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து டில்லி, மும்பை, கோல்கட்டா நகரங்கள் இடம் பிடிக்கின்றன.

சென்னைக்கு இந்தப் பட்டியலில் 153வது இடம் கிடைத்துள்ளது. ‘மெர்சர் இன்பர்மேஷன் புராடக்ட் சொல்யூஷன்ஸ்’ என்ற தனியார் நிறுவனம், உலகளவில் வாழ்வதற்குத் தகுதியான 221 நகரங்களை சர்வதேச அளவில் சர்வே மூலம் பட்டியலிட்டது. அதில், முதலிடத்தை ஆஸ்திரியா நாட்டின் வியன்னா பிடித்துள்ளது. இதையடுத்து சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சும், மூன்றாமிடத்தில் ஜெனிவாவும் உள்ளன.

நான்காம் இடத்தில் கனடாவின் வான்கூவர் மற்றும் ஐந்தாமிடத்தில் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரங்கள் உள்ளன. டசல்டார்ப் ஆறாவது இடத்திலும், பிராங்க்பர்ட் மற்றும் மூனிச் ஏழாவது இடத்தில் உள்ளன. சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்ன் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகியவை ஒன்பது மற்றும் 10வது இடங்களில் உள்ளன.

ஆசியாவில் சிங்கப்பூர் 28வது இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து ஜப்பானின் டோக்கியோ 40வது இடத்தில் உள்ளது. இந்திய நகரங்களில் பெங்களூரு 140வது இடத்தைப் பிடித்து முன்னணியில் இருக்கிறது. டில்லி 143வது இடத்திலும், மும்பை 144வது இடத்திலும், கோல்கட்டா 145வது இடத்திலும் உள்ளன. சென்னை 153வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னை பல இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதற்கு, பட்டியலில் பல புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டது தான் காரணம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *