கொழும்பு, மே 26: இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை முடிவெடுத்துள்ளதற்கு அந்நாட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறி டாக்டர்கள், என்ஜீனியர்கள் உள்பட ஏராளமானோர் கொழும்புவில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டக்காரர்களை அழைத்து அதிபர் மகிந்த ராஜபட்ச பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையை பாதிக்கும் எந்த ஒரு உடன்பாட்டையும் தனது தலைமையிலான அரசு மேற்கொள்ளாது என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.
அப்படி ஒருவேளை உடன்பாடு செய்து கொள்ளப்பட்டாலும் அது இரு நாடுகளுக்கும் சம அளவில் பலனை அளிப்பதாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, ஜூன் 8-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அவரது இந்த பயணத்தின் போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே வர்த்தக உடன்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இதை இலங்கையில் டாக்டர்கள், என்ஜீனியர்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்த்துள்ளனர். இந்த உடன்பாடு எட்டப்பட்டால் இலங்கை சந்தையை இந்திய பொருள்கள் ஆக்கிரமித்துவிடும்.
இதனால் உள்நாட்டுத் தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.
Leave a Reply